
பேராவூரணி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை வழங்கல்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் நல தின விழா நடைபெற்றது. வட்டார வேளாண் அலுவலர் எஸ்.ராணி வரவேற்றார். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் உ.துரைமாணிக்கம் தலைமை வகித்து பேசினார். முன்னாள் ஒன்றியத் தலைவர் சாந்தி அசோக்குமார் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை உட்பட பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த தொழில்நுட்பம், மானிய திட்டம் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். இதில் தேசிய மண் வள அட்டை 50 விவசாயிகளுக்கும், 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற உளுந்து விதைகள் 25 பேருக்கும், 50 சதவீத மானியத்தில் இன கவர்ச்சி பொறி 10 பேருக்கும், திரவ உயிர் உரங்கள் 10 பேருக்கும், தெளிப்பு நீர் கருவி 5 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் உழவன் செயலி, மண் மாதிரி சேகரிப்பு உள்ளிட்டவை செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண் உதவி இயக்குநர் ஆர்.மதியரசன், உதவி அலுவலர்கள் ஜி.சசிக்குமார், கே.கார்த்திகேயன் உள்பட பலர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


0 coment rios: