முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் புகைப்படத் தொகுப்பு.
முத்துப்பேட்டை அருகே அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளது. கடலோர சதுப்பு நிலக்காடுகள் என்பது உவர்நீரில் வளரக்கூடிய ஒரு வகை தாவர இனமாகும். கடற்கரையோரம், உப்பளங்களை அடுத்துள்ள சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும் உவர்நீரில் வளரக்கூடிய ஒரு வகை தாவர இனமே சதுப்பு நிலக்காடுகள். இக்காடுகள் வெப்பமண்டல, மிதவெப்பமண்டல காடுகளாக உப்பளங்களில் காணப்படும் பகுதியில் உருவாகின்றன.
இவை பல்வேறு வகை நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்திக் களமாகவும், கடற்கரையோர பாதுகாப்பு அரணாகவும் அமைந்துள்ளன. முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் ஆசிய கண்டத்தில் மிகப் பெரிய அலையாத்தி காடாகும். உலக அளவில் இக்காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாழ 30 நாடுகளில் உள்ளன. இந்தியாவில் இத்தகைய காடுகள் 4827 சதுர கி.மீ பரப்பளவில் இருக்கிறது. கடல் வாழ் உயிரினங்களுக்கு இனப் பெருக்க பகுதிகளாக சதுப்பு நிலக்காடுகள் விளங்குகின்றன. புயல், சூறாவளி, சுனாமியிலிருந்தும் பாதுகாக்கும் அரணாக உள்ளன. மண் அரிப்பை பெருமளவில் தடுக்கிறது.
இவை தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதி வரை நீண்டுள்ளது. இதன் இடையில் உள்ள முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் தெற்கு எல்லையாக பாக்ஜல சந்தியையும், வடக்கு களிமண் உப்பளத்தையும் கொண்டுள்ளது. சதுப்பு நிலத் தாவரங்கள் அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, தீப்பரத்தை, சுர புன்னை என 6 வகையாக காணப்படுகிறது. இவற்றில் அலையாத்தி மரம் முதன்மை தாவரமாகும்.
இது 95 சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது. முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் 3 பிரிவுகளாக உள்ளது. தொடக்க பகுதி தில்லை மரங்களும், நடுப்பகுதியில் நரிகண்டல் மரங்களும், இறுதியாக அலையாத்தி மரங்களும் உள்ளன. இங்கு 1970ம் ஆண்டுக்கு முன் காணப் பட்ட கருங்கண்டல், நெட்டை சுரபுன்னை, குட்டை சுரபுன்னை போன்ற மரங்கள் தற்போது இல்லை. இங்குள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. 147 சிற்றின வகை பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும்தான் நாட்டில் முதன்முதலாக காடுகளுக்கு உள்ளே சென்று பார்க்கும் வகையில் மரம் நடைபாதைகள், உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் காட்டுக்குள் செல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு வந்ததும் அலை யாத்தி காடுகள் இவ்வளவு அழகானதா..? என்ற எண்ணம் மனதில் தோன்றும். இங்கு ஆற்றின் வழியே படகில் மேற்கொள்ளப்படும் நெடுதூரப் பயணம் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து கிடக்கும் அலையாத்தி காடுகளின் இயற்கை அழகு மெய்மறக்க வைக்கும். உள்ளே லகூன் பகுதியில் உள்ள குட்டிக் குட்டி காணப்படும் தீவுகள் கண்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். பறவைகளின் இரைச்சல் ரசிக்க வைக்கும். ஆற்றுவழிப் பயணமாக கடலுக்குச் செல்வது ஒருவகையான ஆனந்தம்.
0 coment rios: