Sunday, January 28, 2018

பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே மார்ச்சில் ரயில் சேவை துவக்கம்

காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதையில், சோதனை ஓட்டம் முடிந்துள்ளதால், மார்ச்சில் ரயில் இயக்கப்பட உள்ளது. அதேநேரத்தில், காரைக்குடி - திருவாரூர் இடையே, 2019 ஜனவரியில் ரயில்களை இயக்கும் வகையில், பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே இருந்த, 187 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, 1,700 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, 2012ல் துவங்கியது.
சோதனை வெற்றி
இதில், காரைக்குடி - திருவாரூர் இடையே, 2014; திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே, 2015ல், ரயில் போக்குவரத்து துவங்கும் என, அறிவிக்கப்
பட்டிருந்தது.
பணிகள் மந்த கதியில் நடந்ததால், ஆறு ஆண்டுகளாகியும் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. தற்போது, காரைக்குடி -
பட்டுக்கோட்டை இடையே, 73 கி.மீ., பாதைப் பணி
முடிந்துள்ளது.
கண்டனுார் புதுவயல், பெரியகோட்டை, வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயுங்குடி, பேராவூரணி, ஓட்டங்காடு, பட்டுக்கோட்டையில், ரயில்
நிலையங்கள் மற்றும் நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணி
முடிந்துள்ளது.
இப்பாதையில்,
வெள்ளாறு, அம்புலி ஆறு மற்றும் அக்னி ஆற்றில், பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள் கட்டும் பணி முழுவதுமாக முடிந்து, அதிகாரிகள், டிராலி மற்றும் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தி உள்ளனர்.
இப்பாதையில், பிப்., இரண்டாவது வாரத்தில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், ரயிலை இயக்கி சோதனை நடத்த உள்ளார்.
பின், ஒப்புதல் அளித்ததும், மார்ச்சில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது.
திருவாரூர் பணி மந்தம்
இத்திட்டத்தில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 74 கி.மீ., பாதை பணி, மந்த கதியில் நடந்து வருகிறது. அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை நிலையங்களில் கட்டுமான பணி நடந்து வருகிறது.
திருத்துறைபூண்டியில், நிலைய கட்டுமான பணி, தற்போது தான் துவக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை - திருத்துறைபூண்டி இடையே, ரயில் பாதை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து, ரயில்வே திட்ட தலைமை அதிகாரி கூறியதாவது:
தளவாடப்பொருட்கள் விலையேற்றம், ஒப்பந்த மதிப்பீடு மாற்றம், மண் மற்றும் மணல் தட்டுப்பாடு என, அடுத்தடுத்து பல சிக்கல்கள் உருவாகின.
இதனால், இவற்றை சரி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதனால், முதல் கட்டமாக, காரைக்குடி - பட்டுகோட்டை இடையே, மார்ச்சிற்குள் ரயில்கள் இயக்கப்படும்.
பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணியை, டிசம்பருக்குள் முடித்து, காரைக்குடி - திருவாரூர் இடையே, 2019 ஜனவரியில், ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாதை
தஞ்சை - பட்டுக்கோட்டை இடையே, 460 கோடி ரூபாயில், 46 கி.மீ., புதிய அகல ரயில் பாதை; மன்னார்குடி - பட்டுக்கோட்டை இடையே, 300 கோடி ரூபாயில், 41 கி.மீ., பாதை அமைக்க நிதி
ஒதுக்கக்கோரி, ரயில்வே வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டங்களுக்கு, வரும் பட்ஜெட்டில், போதிய நிதி ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரி
கூறினார்.

ஐந்து மாவட்டங்களுக்கு பயன்
இந்த பாதைப்பணிகள், ஆறு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் முடியவில்லை. இந்தப்பணிகள் முடிந்தால், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை என, ஐந்து மாவட்ட மக்கள் பயன்பெறுவர். காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, மார்ச்சில் ரயில்கள் இயக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் போக்குவரத்து, பட்டுகோட்டை, பேராவூரணி
மற்றும் அறந்தாங்கியில் இருந்து, காரைக்குடி
அழகப்பா கல்லுாரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கேற்ப, அதிக ரயில்கள் இயக்க வேண்டும்.
செல்வராஜ், நிர்வாகி
அறந்தாங்கி பயணியர் சங்கம், பொதுவாக்கோட்டை.
அதிக பஸ்களை இயக்கணும்
அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டையில் இருந்து, சென்னைக்கு ரயில் வசதி இல்லை; அரசு போக்குவரத்து கழக பஸ்களும் அதிகம் இயக்கப்படவில்லை. இதனால், ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் செலுத்தி, சென்னை செல்ல வேண்டியுள்ளது.
அவற்றில், விசேஷ நாட்களில், இரண்டு மடங்கு
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ரயில் பாதை பணிகள் முடியும் வரை, இங்குள்ள முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு, அரசு போக்குவரத்து கழக பஸ்களை அதிகம் இயக்க வேண்டும்.
சிவேதி நடராஜன்
பேராவூரணி பயணியர் சங்க நிர்வாகி
'வருவாய் தாமதமாகும்'
பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர், அசோக்குமார் கூறியதாவது:
''அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதி மக்கள், தொழில், பணி ரீதியாக, சென்னையில் அதிகம் பேர் உள்ளனர். மீட்டர் கேஜ் பாதையில், இயக்கப்பட்ட கம்பன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில், சென்னை மார்க்கத்தில் தான், அதிக வருவாய் இருந்தது.
இங்கிருந்து, நெல், அரசி, தேங்காய், மீன்,
கருவாடு மற்றும் உப்பு அதிகம் எடுத்துச் செல்லப்படது.
ஆறு ஆண்டுளாக, ரயில் போக்குவரத்து இல்லாததால், லாரிகளில், சென்னைக்கு அதிக செலவு செய்து, அனுப்பப்பட்டு வருகிறது.
பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கியில் இருந்து, பொதுமக்கள், ரயிலில், காரைக்குடி வழியாக சுற்றுப்பாதையில், கூடுதல் துாரம் பயணித்து, கூடுதல் செலவு செய்து, சென்னை செல்ல விரும்பவில்லை.
அதனால், இத்திட்டத்தில், பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணி முடிந்து, சென்னைக்கு ரயில் போக்குவரத்து துவங்கும் வரை, எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.



நன்றி: தினமலர்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: