புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
எதிர்பாராத வறட்சியும், எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாக பெய்யும் பருவமழையும் விவசாயத்திற்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிபொருள் எடுக்க நாடு முழுவதும் பட்டியலிடப்பட்டுள்ள 31 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியையும் அறிவித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட இருந்த மீத்தேன் எரிவாயு திட்டம், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது அதேபோன்றதொரு திட்டத்தை வேறு வடிவத்தில் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை பற்றி எந்தவித விளக்கமும் தராமல், தங்களின் கருத்துகளையும் கேட்டறியாமல், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படும் நிலையில், அது குறித்து உரிய விளக்கம் தர வேண்டும் எனக்கோரும் விவசாயிகள், அவ்வாறு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயெனில் அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
காவிரி நீர், கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. பட்டியலிட முடியாதா பல பிரச்னைகளால் விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில், அரசின் இதுபோன்ற புதுப்புது திட்டங்களும், விவசாயிகளை அச்ச மனநிலைக்குள்ளே இட்டுச் செல்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டும் என்பதே நெடுவாசல் பகுதி கிராம மக்களின் கருத்தாக உள்ளது.
0 coment rios: