கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட ஆழ் குழாயை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மண்எண்ணெய் எடுப்பதற்கான பரிசோதனை எனக்கூறி ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் விவசாய நிலங்களில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது. அதில் குழாய்கள் பொருத்தப்பட்டு கழிவு நீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடு வாசலில் போராட்டம் தொடங்கியதை அடுத்து கோட்டைக்காடு கிராமத்திலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கோட்டைக்காடு கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது எனவும் ஒரு சில மாதங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ் குழாய்கள் அகற்றப்பட்டு கழிவுநீர் தொட்டிகள் மூடப்படும் எனவும் அறிவித்தனர்.
இந்தநிலையில் அதிகாரிகள் உறுதியளித்து பல மாதங்கள் ஆகியும் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ் குழாயை அகற்றவோ, கழிவு நீர் தொட்டியை மூடவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பருவ மழை தொடங்கி உள்ள இக்காலத்தில் விவசாயம் நிறைந்த கோட்டைக்காடு கிராமத்தில் முழுமையான விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்ட குழாயையும், கழிவுநீர் தொட்டிகளை மூடி விவசாய நிலத்தை சமப் படுத்தி தரவும் மற்றும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் போராட்ட குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். இவை உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
0 coment rios: