புதுக்கோட்டை பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பாசன வாய்க்காலை தூர்வாராததால் புதுக்கோட்டை அருகே கிராம மக்களே தூர்வாரும் பணியில் இறங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ளது முனசந்தைக் கிராமம். இக்கிராமத்தில் பொன்னாச்சி, மேலக்கண்மாய், கோவிஞ்சம்பட்டி கண்மாய் என மூன்று பாசனக் குளங்கள் உள்ளன. இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்சாகுபடி செய்யப்படுகிறது.இக்குளங்களுக்கானவரத்துவாரிகளையும், பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டுமென வருவாய்த்துறையினரிடம் பலமுறை வலியுறுத்தியும் கடந்த பல வருடங்களாக தூர்வாரப்படவில்லையாம். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திலும் இப்பணி நடைபெறவில்லை.
இதனால், முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் பாசனப்பரப்பு பாதியாக சுருங்கிவிட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அரசாங்கத்தை நம்பி காத்திருந்து வெறுத்துப்போன கிராம மக்கள் திங்கள் கிழமையன்று தாங்களே நேரடியாக களத்தில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் திரண்டு பொன்னாச்சி கண்மாயிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை உள்ள பாசன வாய்க்காலை தூர்வாரியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி கூறுகையில், ஏரி, குளங்களை மராமத்து செய்வதும், வரத்து வாய்க்காலையும், பாசன வாய்க்காலையும் தூர்வாரி நீராதாரத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை.
அரசாங்கமோ மக்களின் வரிப்பணத்தை தேவையில்லாத பல திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆளுங்கட்சியினர், அரசு அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் என கூட்டாக கொள்ளையடிப்பதற்கே வழிவகுக்கின்றது. முனசந்தை போன்று வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்கள் உள்ளன. இனிமேலாவது வருவாய்த்துறையினர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.
0 coment rios: