தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆ. அண்ணாதுரை.
மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாவட்டத்தில் ரசாயன வர்ணம் பூசப்படாத விநாயகர் சிலைகளைக் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். களிமண்ணால் தயார் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகளுக்கு ரசாயன வர்ணம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசினால் தண்ணீரில் கரையும் தன்மையுடைய மற்றும் எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணக் கலவையைப் பயன்படுத்த வேண்டும்.
வழிபாட்டு பொருள்களான மலர்கள், துணிகள், சிலைகளை அழகு செய்யக்கூடிய பொருள்கள் ஆகியவற்றை சிலைகளை கரைப்பதற்கு முன்பே சிலையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
கடலிலிலிருந்து குறைந்தது அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை தஞ்சாவூர் பகுதியில் வடவாறு, கல்லணை கால்வாயிலும், திருவையாறு, பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம் ஆகிய வட்டங்களில் காவிரி ஆற்றிலும், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய ஊராட்சிகளில் வீரசோழன் ஆற்றிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டார பகுதியில் கடலிலும் கரைப்பதற்கு காவல் துறையினரால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு எடுத்துச் செல்ல காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்ட சாலைகளில் வழியாக மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: