Thursday, August 25, 2016

பேராவூரணி டீ கடையில் தினமும் ஒரு திருக்குறள்.





பேராவூரணி பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கிறது சித்ரா தேனீர் நிலையம். வாசலில் ஒரு கரும்பலகை. திருக்குறளும், தெளிவுரையும் அழகுக் கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. உள்ளே காவி தரித்து, ஒரு முதியவர் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார். கடையெங்கும் ஏராளமான புத்தங்கள். நாற்காலிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பவ்யமாக அமர்ந்திருக்கிறார்கள். டீ போட்ட இடைவெளியில், திருக்குறளை சந்தத்தோடு படித்து மனப்பாடம் செய்வது பற்றி ஆசிரியராக மாறி வகுப்பெடுக்கிறார் அந்த முதியவர். அவரது வெண்கலக்குரல் கடைக்கு வெளியே செல்வோரையும் ஈர்க்கிறது.
பெயர் தங்கவேல். தங்கவேலனார் என்று மரியாதையாக அழைக்கிறார்கள் பேராவூரணி மக்கள்.
மூன்றாம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. படித்ததெல்லாம் வாழ்க்கைப் பாடம் தான். விவசாயம், வீடு என்றிருந்தவரை அரசியல் ஈர்த்தது. தொடக்கத்தில் மார்க்சியத்தில் ஈடுபாடு. தானே பாடல்கள் புனைந்து ஊர் ஊராகப் போய் பாடுவார். பேராவூரணியைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் இவர் குரல் ஒலிக்காத ஊர் இல்லை.
குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குப் பிறகு காந்திய சிந்தனைகள் ஈர்க்க, இளைஞர்கள் மத்தியில் காந்தியை பிரசாரம் செய்தார். சங்க இலக்கியங்களில் ஈடுபாடு ஏற்பட அவற்றையும் கற்றுத்தேர்ந்தார். சுய முயற்சியில் ஆங்கிலம் கற்று விவேகானந்தர் புத்தகங்களை மொழி மாற்றும் அளவுக்கு புலமை பெற்றார். இறுதியில் இவர் வந்து நின்றது திருக்குறளில்.
விவசாயம் பொய்த்துப் போனதால், வாழ்வாதாரத்துக்காக ஆரம்பித்தது தான் டீக்கடை. காலப்போக்கில் இலக்கிய ஆர்வம், பேச்சார்வம், திருக்குறள் ஈடுபாடு கொண்டோரின் வேடந்தாங்கலாக மாறியது டீக்கடை. தங்கவேல் கடைக்குப் போனால், டீயோடு சேர்த்து, திருக்குறளும் கேட்கலாம் என தொலைதூர வாடிக்கையாளர்கள் எல்லாம் தேடி வந்தார்கள். திருக்குறளை வெறும் மனப்பாடப் பாடலாக அல்லாமல், மக்களின் வாழ்க்கையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார் தங்கவேலனார்.



"அந்தக் காலத்துல வேளாண்மைக்கு இணையான தொழில் எதுவுமில்லை. அதனால, வெளிவேலைக்குப் போறதைப் பத்தியெல்லாம் நாங்க யோசிச்சதில்லை. பள்ளிக்கூடத்திலயும் ஒட்ட முடியலே. சராசரியான ஒரு விவசாயியாத் தான் இருந்தேன். கஷ்டப்பட்டு நாம விளைவிக்கிற நெல்லுக்கு எங்கிருந்தோ ஒருத்தன் விலை வைக்கிறான். விவசாயத்துல ஒரு பலனும் இல்லேன்னு ஆனபிறகு, அது சம்பந்தமா யோசிக்க ஆரம்பிச்சேன். இதுக்கெலாம் தீர்வு மார்க்சியம்தான்னு தெரிஞ்சுச்சு. தொடர்ச்சியா வாசிக்கப் பழகுனேன். காலம் நிறைய படிப்பினைகளைக் கொடுத்துச்சு. திருக்குறளை படிச்சப்போ, உலகத்துல உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் அதுக்குள்ள தீர்விருக்குன்னு புரிஞ்சுச்சு. வேளாண்மைக்கு, குடும்பப் பிரச்னைக்கு, தேசப்பிரச்னைக்கு, தண்ணிப் பிரச்னைக்குன்னு எல்லா பிரச்னையையும் ரெண்டு ரெண்டு வரிகள்ல அலசி ஆராஞ்சு தீர்வும் சொல்லியிருக்கார் வள்ளுவர். இதுதான் உலகத்துக்குத் தேவையான இலக்கியம்ன்னு முடிவு பண்ணி, அதை மாணவர்களுக்குப் போதிக்க ஆரம்பிச்சேன். திருக்குறளை வெறும் மதிப்பெண் கொடுக்கிற மனப்பாடப் பாடலா படிச்சுப் பழகின பிள்ளைங்களுக்கு அதோட உள்ளடக்கத்தை சொல்லிக் கொடுக்க புதிய நுட்பங்களைத் தேடுனேன். சந்தம் பிரிச்சு, பாட்டு மாதிரி சொல்லிக் கொடுத்தேன். நாடகங்கள் வழியா கத்துக் கொடுத்தேன். திருக்குறள்ங்கிறது ஒருவித வாழ்க்கை நெறி. அதை மனப்பாடம் செய்யக் கத்துக் கொடுக்கிறதை விட வாழ்க்கையா மாத்திக்க கத்துக் கொடுக்கனும். அதைத்தான் இப்போ முழு நேர வேலையாச் செய்யிறேன். இந்த டீக்கடையெல்லாம் பகுதி நேரம் தான்.
திருக்குறளை மேலோட்டமாப் பாக்கும்போது, மிரட்சியா இருக்கும். ஆனா, சந்தம் பிரிச்சுப் படிக்கப் பழகிட்டா, அப்படியே மனசுல ஒட்டிடும். நிறைய பிள்ளைகள் அப்படி தயாராகியிருக்காங்க. மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு திருக்குறள் பயிற்சி அதிகம் தேவையாயிருக்கு. இடையிடையே அந்த வேலையையும் செஞ்சிக்கிட்டிருக்கேன். திருக்குறளை எல்லா மட்டத்திலயும் கொண்டு போய் சேக்கிற விதமா, திருவள்ளுவர் தினம் அன்னிக்கு 1 ரூபாய்க்கு டீ விக்கிறது, பொதுமக்கள் கூடுற இடத்துல திருக்குறள் புத்தகம் வினியோகிக்கிறதுன்னு சில பிரசார திட்டங்களை செயல்படுத்துறேன். டீக்கடை வாசல்ல ஒரு கரும்பலகை வச்சு தினமும் ஒரு திருக்குறளை பொருளோட எழுதிப்போடுறேன். இந்தப் பகுதியில இருக்கிற இளைஞர்களோட இணைஞ்சு திருக்குறள் பேரவைன்னு ஒரு அமைப்பை உருவாக்கி பள்ளி, கல்லூரிகள்ல திருக்குறள் விழிப்புணர்வு, பயிலரங்குகளை நடத்திக்கிட்டிருக்கோம். திருக்குறளுக்கு முரணில்லாத தெளிவான ஓர் உரையை எழுதுற வேலையிலயும் இறங்கியிருக்கேன். காலம் கைகூடினா விரைவிலேயே அது அச்சுல வரும்..." என்கிறார் தங்கவேலனார்.
வெ.நீலகண்டன்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: