பேராவூரணி நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்தது.
பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டாணிக்கோட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில், நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 200 மாணவ, மாணவிகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். ஒரு தலைமையாசிரியர் மற்றும் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நடுநிலைப்பள்ளிக்கு 3 வகுப்பறை கட்டிடங்களும், 1 தலைமையாசிரியர் அறை என மொத்தம் 4 கட்டிடங்கள் உள்ளன.
இதில் ஒரு வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதன் அருகே மாணவர்கள் செல்லாத வகையில் கயிற்றிலான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்க வலியுறுத்தி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி நிர்வாகத்தால் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும், ஓராண்டு முடிந்த நிலையிலும், இதுவரை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
இதேபோல் தலைமையாசிரியர் அறையும் மழையினால் சுவர்கள் ஊறிப்போய், சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும், சுவர் விரிசல் விட்ட நிலையிலும் உள்ளது. இதனால் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடனேயே வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வியாழன் அன்று காலை 7 மணி வாக்கில் தலைமையாசிரியர் அறை முன்பு சன்ஷேட் சுவர் 4 அடி நீளத்திற்கு 3 அங்குல கனத்தில் திடீரென பெயர்ந்து தரையில் விழுந்தது. காலை நேரம் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வராததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி நேரமாக இருந்தால், அருகில் குடிநீர் தொட்டிக்கு, குடிப்பதற்கு தண்ணீர் பிடிக்க வரும் மாணவர்களுக்கு பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்று பெற்றோர்கள் பதைபதைப்புடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீராசாமி கூறுகையில், " பழுதடைந்த வகுப்பறைகளில் அச்சத்துடன் மாணவர்கள் படித்து வருகின்றனர். சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தருமாறு, ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் முறையிட்டும் கண்டுகொள்ளப்படாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்கள், ,ஆசிரியர்கள் அச்சத்தை போக்கவேண்டும்" என்றார்.
நாம் சென்ற போது கூட மரத்தடியில் நிழலில் வகுப்புகள் நடைபெறுவதை கண்கூடாக காண முடிந்தது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். மாணவர்கள் உயிரோடு விளையாடும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி: அதிரை நியூஸ்
0 coment rios: