இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டபடி, ஜன. 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மீது தொடர் பணியாக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு 1.1.2000 வரை பிறந்தவர்கள் அதாவது 1.1.2018 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், கடந்த ஆண்டு பெயர் சேர்க்கத் தவறியவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்குத் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் தொடர்புடைய நகராட்சி அலுவலகங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, அதனுடன் வயதுக்கான ஆதார சான்று நகல் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
மேலும், அனைத்து இ-சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு படிவம் 6-ஏ, பெயர் நீக்கம் செய்ய படிவும் 7, பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம் செய்ய படிவம் 8 ஏ, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 போன்ற தங்களின் தேவைக்குரிய படிவத்தை நிறைவு செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருவிடைமருதூர் தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அத்தொகுதியில் 18 வயது நிறைவடைந்த பெண்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நேரடியாக உரிய படிவத்தில் நிறைவு செய்து அளிக்க இயலாதவர்கள் இணையவழி அல்லது இ - சேவை மையம் மூலமாக www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

0 coment rios: