Wednesday, February 14, 2018

பேராவூரணி அருகே சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

பேராவூரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது, கல்லூரணிக்காடு ஊராட்சி. இங்கு ஆதித்திராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அமைந்துள்ள இடம், அங்கன்வாடி மையம் மற்றும்ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றை கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் அரசுக்கு தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்லூரணிக் காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணிக்கான இடத்தை, நிலத்தை தானமாக வழங்கிய தரப்பினரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கும் படி கோரிக்கை விடப்பட்டது. அமைப்பாளர் பணிபெற்றுத் தருவதாக கூறி அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் பணம்பெற்றுக் கொண்டதாகவும் கூறப் படுகிறது. இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருபகுதி பொதுமக்கள், ஊராட்சி மன்றமுன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றை திங்கள் கிழமை அன்று இழுத்து பூட்டினர்.

மேலும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு முன்பாக உள்ள நிலத்தின்உரிமையாளர்கள், தங்களது இடத்தைச் சுற்றி வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிக்கு செல்வதற்கு உரியபாதை வசதி இல்லாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமப் பட்டனர். இந்த சம்பவம் குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளும், பேராவூரணி ஒன்றிய ஆணையர் சித்ரா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில்பார்வையிட்டனர்.

அதிகாரிகளின் சமாதான முயற்சியினை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், கல்லூரணிக்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் போராட்டம் இந்நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய் அன்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் தலைமையில் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வரவில்லை. இதுகுறித்து கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்குவதில் ஆளுங்கட்சியினரின் தொடர்பு தற்போதைய போராட்டத்தால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: