அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தங்கள் காளைகளைத் தயார்படுத்தும் பணிகளில் இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். மணலை மலைபோல குவித்து, அதில் காளைகளைக் குத்தவைத்து பயிற்சி தருகிறார்கள். தினமும் இரண்டு கொம்புகளிலும் விளக்கெண்ணெய்யைத் தடவிவிட்டு, மெல்லிய கத்தியால் சீவி கூர்மைப்படுத்துகிறார்கள். காளை எப்போதும் சீற்றமும் கோபமுமாக இருப்பதற்காக அதை அடிக்கடி சீண்டிவிடுகிறார்கள். இப்படிச் செய்வதன்மூலம் தனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அருகில் வந்தாலே காளைகள் சீறும். சீற்றம் வற்றாத காளைகள்தான் வாடிவாசலில் ஏவுகணை போல வரும். மாடுபிடி வீரர்களால் அப்படிப்பட்ட காளைகளைத் தொடக்கூட முடியாது" என்கின்றனர் ஜல்லிக்கட்டுக்காகவே காளைகளை வளர்ப்பவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆலங்குடி, அரிமளம் பகுதி காளைகளுக்குத் தனி மரியாதை உண்டு. அதிலும், ஆலங்குடி காளை வருகிறது என்றாலே, மாடுபிடி வீரர்கள் இரண்டு 'தப்படி' பின்வாங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு சினந்துகொண்டும் சீறிக் கொண்டும் வரும். இங்கு, மாடு வளர்ப்போர் வீடுகளில் காணும் அதிசய என்னவென்றால், மிரட்டும் இந்தக் காளைகளை அந்த வீட்டுச் சிறு வாண்டுகள் தொட்டு விளையாடுவதுதான்.

0 coment rios: