Sunday, July 30, 2017

பேராவூரணி அடுத்த செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம்.









செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் பசுமையைத் தூவி நிற்கும் மரங்கள், பள பள கட்டடங்கள், சுற்றுப்புறம் எங்கும் தூய்மை என ஒரு அழகிய பூங்காவைப் போல இருக்கிறது அந்த இடம். மருந்து வாடை, மருத்துவக் கழிவுகள் என மருத்துவமனைக்கு உரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் கார்ப்பொரேட்  மருத்துவமனைக்கு நிகராக நிமிர்ந்து நிற்கிறது ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி. விவசாயத்தையே ஜீவாராதரமாகக் கொண்ட கிராமம்.  மண்ணையும்,தென்னையையும் கவனிக்கும் அளவுக்குத் தங்கள் உடல் நிலை குறித்த எந்தவிதமான கவனிப்பும், விழிப்புணர்வும் இல்லாமல் வாழும் மக்கள். இந்த ஊரில் 1968-ல் ஆரம்பிக்கபட்டது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஆரம்பத்தில் எல்லா அரசு மருத்துவமனைகளை போலவேதான் இதுவும் செயல்பட்டு வந்தது.

இன்று ஆபரேஷன் தியேட்டர், பிரசவம், குடும்பக் கட்டுபாடு, விஷ முறிவு, சித்தமருத்துவம், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கட்டடங்கள். மெகா சைஸ் ஜெனரேட்டர் என ஆச்சர்யமூட்டும் வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தச் சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரே ஈர்க்கிறது. இங்கு என்ன என்ன சிக்கிச்சைகள் கொடுக்கப்படுகின்றன? அரசு வழங்கும் திட்டங்கள் என்னென்ன? என  அனைத்து விபரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எழுதி வைத்துள்ளார்கள்.

சுற்றுச்சூழல், சிகிச்சை, வசதிகள், உபசரிப்பு என எல்லா வகையிலும் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையின் மாற்றத்துக்கு யார் காரணம் என்று கேட்டால், "எங்க டாக்டர்தான்" என்று செளந்தராஜனை நோக்கி கை நீட்டுகிறார்கள் மக்கள்.

நாம் அவரைச் சந்திக்க சென்ற போது, சிகிச்சைக்காக வந்திருந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரிடமும்  அக்கறையாக விசாரிக்கிறார். எழுபது வயது இருக்கும்  வயதான பாட்டி, "எனக்கு என்ன நோவுன்னே தெரியலை... இடுப்புக்கு கீழே ஒரே வழியா இருக்கு... அந்த ஒவத்திரியம் தாங்க முடியல சாமி" என தன் மகனிடம் சொல்வதை போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார். "காலம் முழுக்க உழைத்த  உடம்பு...  எலும்பு தேய்ந்திருக்கும் இந்த மருந்த சாப்பிடு ஆத்தா சரியாயிடும்" என அன்போடு சேர்த்து மாத்திரையையும் கொடுத்து அனுப்புகிறார்.

இன்னும் சிலருக்கு சிகிச்சை அளித்துவிட்டு, "கொஞ்சம் இருங்க தம்பி வரேன்..." என  நம்மிடம் சொல்லிவிட்டு 'மருத்துவமனை சுற்றிலும் சுத்தமாக இருக்கிறதா' என ஒரு ரவுண்ட் அடித்துப் பார்த்துவிட்டு வந்து பேச ஆரம்பிக்கிறார்.

"ஒரு நோயாளி குணமாவதற்கு மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது... சுத்தமும், சுகாதாரமும் ரொம்ப அவசியம். சுற்றுப்புறம் அசுத்தமா இருந்தா அதுவே பல  நோய்கள் வருவதற்கு வழி வகுக்கும். அதனால்தான் தூய்மை விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டுகிறேன்.

நான் இந்த பகுதியின் வட்டார மருத்துவ அலுவலராகவும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிலைய மருத்துவராகவும் இருக்கிறேன். 1992 -ம் ஆண்டுதான்  நான் இங்கு பணிக்கு வந்தேன்.

நானும் கிராமப்பகுதியில் பிறந்தவன்தான்.  பொதுவாக, கிராமப் பகுதிகளில் இருக்கிற மக்களுக்குச்  சுகாதாரம் குறித்து போதிய விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பார்கள். அதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சொல்லவே வேண்டாம். பிரசவம் குறித்த பயம், சத்துணவு இல்லாமை எனப் பல பிரச்னைகள். தாய், சேய் மரணம் அதிகமாக நடக்கும். இவற்றை முதலில் சரி செய்ய வேண்டும் என நினைத்தேன்.

வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்களிடம், "சத்து குறைபாடுள்ள உணவுகளைச் சாப்பிடுவதால்தான் உங்களுக்கும்,குழந்தைக்கும் குறைபாடு ஏற்பட்டு விபரீதங்கள் நடக்கின்றன. சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்" என்று சொல்லி, எதெல்லாம் சத்தான உணவுகள் என்றும் சொல்லி அனுப்புவேன்.

ஒரு கட்டத்தில், "நாம ஏன் இதை சொல்வதோடு நிறுத்திக்கிறோம்... நாமே சத்தான உணவைத் தயாரித்துக் கொடுத்தால் என்ன" என்ற யோசனை வந்தது. உடனே  சில நண்பர்களைப் பிடித்து விஷயத்தை சொன்னேன். அவர்களும் ஆர்வமாக உதவ முன் வந்தார்கள். செவ்வாய்கிழமை தோறும் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு கொடுக்க ஆரம்பித்தோம். 2007-ம் வருடத்தில் இருந்து இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இங்கு செயல்படுத்திய பிறகே அரசு தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது..."  எனப் பெருமிதமாகச் சொல்கிறார் டாக்டர் செளந்தராஜன்.

தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதற்கும் முன்னுதாரணமாக இருந்தது இந்த ஆரம்ப சுகாதார நிலையம்தான்.   "கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடுவது, பிரசவகாலத்தின் போது ஏற்படும் பய உணர்வை போக்கத்தான். அது மட்டும் இல்லாமல் வளையல் சத்தத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆக்டிவாக இருப்பதோடு அதன் வளர்ச்சியும் அதிகமாகும். இந்த விழா இரு உயிர்களுக்கான நலன் சம்பந்த பட்ட விஷயம்.

அதனால் நமது மருத்துவமனையிலேயே வளைகாப்பு விழாவையும் நடத்த வேண்டும் என நினைத்தேன். அதற்காக ஒரு திருமண மண்டபத்தை பிடித்து  700 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் அமர வைத்தோம். கூடவே அவர்களின் உறவினர்களும். கர்ப்பிணி பெண்களுக்கு வளையலிட்டு வகை வகையான விருந்து வைத்து மருத்துவ குழுவினரோடு ஊரே கூடி வளைகாப்பு நடத்தபட்டது. அந்த நேரத்தில் பிரசவம் குறித்த விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தினேன். மிக பிரமாண்டமாக  நடந்த இந்த வளைகாப்பு திருவிழாவில் அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ தொண்டர்கள், நன்கொடையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். பின்னர்  தமிழக அரசு எல்லா ஊர்களிலும் வளைகாப்பு விழாவை நடத்த வேண்டும் என ஒரு திட்டமாகவே  உத்தரவிட்டது.  இன்று எங்கும் இந்த விழா நடப்பதற்கு நாங்கள்தான் முன்னோடி எனச் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி எங்களுக்கு.

ஒவ்வொரும் மாதமும் 20 முதல் 30 பிரசவங்கள் இங்கு நடக்கின்றன. கடந்த மாதம் ஒரே நேரத்தில் 18 பேருக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அளவிற்கு இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. எங்கள் செயல்பாட்டைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் விருது வழங்கியுள்ளார். ISO தரசான்றும் எங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த வளர்ச்சி நன்கொடையாளர்கள் மற்றும் எங்க ஊழியர்களால்தான் சாத்தியமானது என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் டாக்டர் சௌந்தர்ராஜன்.

மருத்துவமனையைச் சுற்றி ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் காய்கறித் தோட்டம், பசு மாடுகள் வளர்ப்பது அதன் மூலம் கிடைக்கும் பாலை கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பது, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா அமைப்பது எனப் பல திட்டங்கள் அரசு மற்றும் நன்கொடையாளர்கள் உதவியோடு செய்ய இருக்கிறார்கள். நன்கொடையாளர்களை மறக்காமல் அவர்களின் பெயர்களைக் கல்வெட்டிலுல் எழுதி நன்றி செலுத்துகிறார்கள்.

"சுத்தமா இருக்கும், சிகிச்சை தரமா இருக்கும் என்றுதான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்குச்  செல்கிறார்கள்.  எங்களுக்கு எல்லா வசதிகளும்  இங்கேயே கிடைத்து விடுகின்றன..." என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

ஒரு மருத்துவர் மனது வைத்ததால்  ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் மாறியது. எல்லா அரசு மருத்துவர்களும் மனது வைத்தால்..?


நன்றி: விகடன்



SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: