பேராவூரணி கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள்.
பேராவூரணி பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் பட்டுப்போய் கருகி வருகின்றன.தஞ்சை மாவட்டத்தில் வளமான பகுதிகளில் பேராவூரணி பகுதி முக்கியமானதாகும். கடைமடைப்பகுதியான இங்கு காவிரியின் கிளை வாய்க்கால் ஓடி வருவதாலும், நிலத்தடி நீர்மட்டம் நல்ல நிலையில் இருந்ததாலும் நெல், கடலை, வாழை, தென்னை என பணப்பயிர்கள் குறைவின்றி விளைந்து, விவசாயிகளுக்கு லாபம் கொடுத்து வந்தன.இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வானம் பொய்த்து இயற்கை கைவிட்டதாலும், காவிரியின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் இன்றி போனதாலும் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை மற்றும் சம்பா பயிர் சாகுபடி கைவிட்டு போனது.
மழை இல்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. நூறடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 350-400 அடிக்கு கீழே போய்விட்டது. இதனால் ஆழ்துளைக்கிணறுகள் வறண்டு போய் நீர்வரத்து இல்லாமல் ஆயின. கடும் வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் கால்நடைகள், பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.தண்ணீர் இல்லாததால் தென்னை மற்றும் வாழை போன்ற பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதன் காரணமாக வாழை, தென்னை போன்ற பயிர்கள் வறட்சியின் கோரத் தாண்டவத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப்போய், மட்டைகள் கருகி கீழே சாய்ந்து வருகிறது.
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.அவ்வாறு வழி இல்லாத இடங்களில் தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன. தப்பித்தவறி காய்க்கும் தென்னை மரங்களில் காய்கள் திரட்சியின்றி சிறுத்துக் காணப்படுகின்றன. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இயற்கை இரங்கி மழை பெய்தால் மட்டுமே பட்டுக் கருகி வரும் தென்னை மரங்களை காப்பாற்ற முடியும்.
0 coment rios: