இதுவரை ரேஷன் கார்டு பெறாதவர்கள் ஸ்மார்ட் வடிவிலான ரேசன்கார்டு பெறுவதற்கு இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் இருந்த ரேசன்கார்டுக்கு பதிலாக புதிதாக ஸ்மார்ட் வடிவிலான கார்டு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 317 ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இதுவரை ரேசன்கார்டு பெறாதவர்கள் புதிய ஸ்மார்ட் வடிவிலான கார்டு பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வட்ட வழங்கல் அலுவலர்களால் விசாரணை செய்யப்பட்டு ஸ்மார்ட் வடிவிலான ரேசன்கார்டிற்கான ஒப்புதலை இணையதளத்தில் அளித்தவுடன் விண்ணப்பதாரரின் செல்எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும். பின்னர் தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட செல் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும். செல் எண்ணை உள்ளீடு செய்த பின்னர் அதே செல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 4 இலக்க எஸ்எம்எஸ் வரும். அந்த எண்ணை கம்ப்யூட்டர் இயக்குபவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பதாரரின் ஸ்மார்ட் அட்டை அச்சிட்டு வழங்கப்படும்.
ஏற்கனவே இணையதளத்தில் புதிய ஸ்மார்ட் வடிவிலான கார்டு வேண்டி விண்ணப்பம் செய்திருப்பவர்கள் எஸ்எம்எஸ் வந்தவுடன் மேற்குறிப்பிட்டபடி இ சேவை மையத்தினை தொடர்பு கொண்டு ஸ்மார்ட் வடிவிலான கார்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினகரன்
0 coment rios: