Thursday, June 29, 2017

பேராவூரணி அருகே பூக்கொல்லையில் இருந்து காரங் குடா கிழக்கு கடற்கரை செல்லும் இணைப்பு சாலையைச் சீரமைத்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

பேராவூரணி அருகே பூக்கொல்லையில் இருந்து காரங் குடா கிழக்கு கடற்கரை செல்லும் இணைப்பு சாலையைச் சீரமைத்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பூக்கொல்லை,கழனிக்கோட்டை, முடச்சிக்காடு, வீரியங்கோட்டை, உடையநாடு, மரக்காவலசை வழியாகக் காரங் குடாவில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று இணையும் 9 கி.மீ தூரமுள்ள இணைப்பு சாலை உள்ளது.இச்சாலை, பூக்கொல்லை தொடங்கிக் கழனிக்கோட்டை, முடச்சிக்காடு, வீரியங்கோட்டை, உடையநாடு, மரக்காவலசை எனப் பல இடங்களில் சுமார்6 கி.மீ தூரம் வரை சாலைகள்பெயர்ந்தும், குண்டுங்குழியுமாகவும் காணப்படுகிறது. குறிப்பாகக் கழனிக்கோட்டை செல்லும் வழியில் சாலையோரம் கொட் டப்பட்ட மண், மழையினால் அரித்துச் செல்லப்பட்ட நிலையில், தார்ச்சாலை பெயர்ந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இவ்வழியே செல்லும் பேருந்துகள் இந்த இடத்தைக் கவனமுடன் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வழியே புதிதாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாலையோர மரணக்குழியைக் கவனிக் காமல் போனால், பெரும் அசம்பாவிதம் நடந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியில், ஒப்பந்ததாரர்களுடன் கமிசனுக்காக கைகோர்த்துச் செயல்படுவதால், ஒன்றியம் முழுவதுமே சாலைகள் தரமற்றதாகவும், ஒழுங்கற்றதாகவும் அமைக்கப்படுகிறது. தர விதிகள் கடைப் பிடிக்கப்படாமல் தரமற்றதாக அமைக்கப்படும் தார்ச்சாலைகள் சில தினங்களிலேயே சேதமடைந்து விடுகின்றன. பெய்யும் மழையில் முற்றிலுமாகச் சாலைசேதமடைந்து, தார்ச்சாலையானது கப்பிச் சாலையாக மாறி விடுகிறது.இப்பகுதியில் விவசாய நிலங்கள் இருப்பதால், விளைபொருட்களை விவசாயிகள் இவ் வழியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதும், கடற்கரை பகுதி துறைமுகங்களில் இருந்து மீன் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களைப் புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி எனப்பல பகுதிகளுக்குக் கொண்டுசெல்லும் முக்கிய சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது கண்டிக் கத்தக்கது எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிபிஎம் எச்சரிக்கை இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.கருப்பையன் ஆகியோர் கூறுகையில், “ பேராவூரணிநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கிறோம். பலமுறை தொகுதியில் உள்ள சாலை பிரச்சனைகுறித்து நேரில் முறையிட்டும் கண்டுகொள்ளாத, பிரச்சனையைத் தீர்க்க முன்வராத அலட்சியப் போக்கு ஏற்கத்தக்கதல்ல. பூக்கொல்லை-காரங்குடா சாலையை உடனடியாகச் சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்வரவேண்டும். இல்லையெனில் இப்பகுதி மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தீக்கதிர் 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: