பேராவூரணி அருகே காலகம் கிராமத்தில் நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை எனக்கூறி அம்மா திட்ட முகாமிற்கு வந்திருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.பேராவூரணியை அடுத்த காலகம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கோட்டாட்சியர் காரில் ஏறும்போது, கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள், “காலகம் ஊராட்சியில் கடந்த பல மாதங்களாகவே நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக பஞ்சாமிர்தம், சிவபாக்கியம், அஞ்சலை, தங்கம், கனகம், மாணிக்கம் உள்ளிட்ட பலருக்கு கடந்த சில மாதங்களாகவே கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், வங்கிப் புத்தகம் வழங்கப்படவில்லை எனவும், சட்டபூர்வமான கூலி வழங்கப்படாமல், கூலியாக ரூ.80, 90 மட்டுமே வழங்கப்படுவதாகவும், வேலையில்லை என பலரையும் திருப்பி அனுப்புவதாகவும், வேலை செய்த பணம் கணக்கில் ஏறுகிறதா என்றுகூட தெரியவில்லை என்று நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள் சரமாரியாக புகார் செய்தனர். இதனை கேட்ட கோட்டாட்சியர், பொதுமக்கள் குறைகள் களையப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் குறைகள் குறித்து வங்கி முகவர்களை அழைத்துப் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் தங்கள் குறைகளை தன்னிடம் கோட்டாட்சியர் அலுவலகம் வந்து மனுவாக தருமாறு கேட்டுக் கொண்டார்.
நன்றி : தீக்கதிர்
0 coment rios: