புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமம். அங்கே தங்கசாமி என்றொரு விவசாயி. 35 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. விவசாய நிலங்களை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஹோட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.
அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.
நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.
வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் 5000 க்கு மேற்பட்ட மரங்களுடன், 25 ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய இன்றைய மதிப்பு பல கோடி. ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோடீஸ்வரர்.
தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரக்கன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.
இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காட்டை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.
அதுசரி, மரம் வளர்ப்பு மூலம் எப்படி கோடீஸ்வரனாக முடியும்? ஆச்சரியமடையத் தேவையில்லை.. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ தான்.
ஒரு முத்தின செஞ்சந்தன மரத்தின் இன்றைய விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் ஒரு டன் குமிழ் மரம் 8000 முதல் 10,000 வரை விலை போகின்றன. ஹெக்டேருக்கு சுமார் 1200 மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்..
''நம்ம விவசாயிகளுக்கு நான் சொல்றது ஒன்னே ஒண்ணுதான்.. உங்க நிலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணா பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி எப்படியும் போங்க.. அது உங்க உரிமை.. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும்.
ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம், வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பல்வேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.