பேராவூரணி அருகே வங்க கடலோரம் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மனோரா உப்பரிகை மாளிகை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. பேராவூரணியிலிருந்து 10 கிமீ, பட்டுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சரபேந்திரராஜன்பட்டினத்தில் மனோரா அமைந்துள்ளது.
பிரெஞ்ச் நாட்டை ஆண்ட மாவீரன் நெப்போலியன்போன பர்ட்டை ஆங்கிலேயர்கள் 1813ம் அண்டு லிப்சிக் போரிலும், 1815ம் ஆண்டு வார்ட்டர்லூ கடற்போரிலும் வெற்றி கொண்டதன் நினைவாக ஆங்கிலேயர்களின் நிர்பந்தங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடத்தி வந்த தஞ்சை இரண்டாம் சரபோஜி மன்னர் எழுப்பிய நினைவுச்சின்னமே இந்த மனோரா உப்பரிகை. இந்து மற்றும் இஸ்லாமிய கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. கபோதக - புறாக்கூடு கட்டடக்கலையின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இரண்டு வாயிற்படிகளைக் கொண்ட இந்த மாளிகையின் வட்ட வடிவிலான முகப்புகளில் குதிரை லாயம் மற்றும் வீரர்கள் தங்குவதற்கான சிறுசிறு குடில்கள் உள்ளன.
அதைத்தாண்டி மாளிகைக்குள் செல்ல ஒரு வழி உள்ளது. அதைக் கடந்தால் கோட்டையைச் சுற்றிலும் அகழி உள்ளது. இந்த அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதாகவும் இதை கடக்க ஷட்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அறுங்கோண தள வடிவில் 23.3 மீட்டர் உயரமுள்ள 8 அடுக்குகளைக் கொண்ட இந்த மாளிகையின் மேல் செல்ல இரு வழிகள் உள்ளன. முட்டை, வெல்லம், சோற்றுக்கற்றாழை, சுண்ணாம்பு அடங்கிய கலவையால் கட்டப்பட்ட உட்புறச் சுவர்களின் தரம் மற்றும் கலைநயம் தற்கால நவீன கட்டட நுணுக்கங்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.
இந்த உப்பரிகைளின் மேலே நின்று வங்கக்கடலைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த பகுதி 1777 முதல் 1885ம் ஆண்டு வரை துறைமுகப்பட்டினமாக இருந்துள்ளது. மனோராவிலிருந்து தஞ்சாவூர் அரண்மனை மருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு சுரங்கப் பாதை இருந்ததாகவும் காலப்போக்கில் தூர்ந்திருக்கக்கூடும் என்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இங்கு தமிழ், உருது, மராட்டியம், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கல்வெட்டுகளும் உள்ளன. தொல்லியல்துறை நிர்வாகத்தில் உள்ள மனோரா சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டு சில மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோடை விடுமுறையில் மனோராவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் கலங்கரைவிளக்கம் இல்லாததால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கரை திரும்ப வழி தெரியாமல் திசைமாறி சென்று விடுகின்றனர் . இந்த பிரச்சனைக்குத்தீர்வு காண மீனவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . இதன்பேரில் , மல்லிப்பட்டினத்தை அடுத்துள்ள இந்த மனோரா அருகில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கலங்கரை விளக்கங்கள் அமைச்சகத்தின் சார்பில் பிரம்மாண்டமான கலங்கரைவிளக்கம் அமைக்கப்பட்டு வருகிறது . இந்த கலங்கரைவிளக்கம் மனோராவின் உயரமான 75 அடியைவிட இரு மடங்கு அதிகம் உள்ளதால் , 20 மைல் தூரம் வரை கலங்கரைவிளக்கம் தெரியும் . மேலும் இது ' சிலி பாம் டெக்னாலஜி ' முறையில் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது .
உலகத்திற்கே பேராவூரணியை அடையாளப்படுத்தும் இந்த மனோரா, பேராவூரணியின் வரலாற்றுசின்னம் தானே!!!
0 coment rios: