Monday, May 23, 2016

பேராவூரணி!! ஓர் மண்ணுல சொர்க்கம்



பேராவூரணி!! ஓர் மண்ணுல சொர்க்கம் - அறிந்ததும், அறியாததும்.
பேராவூரணி, இது பார் போற்றும் தஞ்சை தரணி மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் உள்ள ஓர் அழகிய ஊராகும். சோழ தேசத்திற்கு சொந்தமானதாக இருந்த இந்த பேராவூரணி பகுதியானது, தஞ்சை தரணியின் தனிஅடையாளமான பச்சை போர்வையுடன் பரந்துவிரிந்துகாணப்படுகிறது. வளர்ந்துவரும் நகரமாக காட்சியளிக்கும் இந்த பேராவூரணி, பல சிறப்புகளைக்கொண்ட இந்த பேராவூரணி குறித்து பல்வேறு தகவல்களை தொடர்ந்து காண்போம்.

பேராவூரணி:
பேராவூரணி என இந்த ஊர் பெயர் பெற காரணம், இப்பகுதியில் உள்ள பெரிய ஊரணியே ஆகும். பேராவூரணியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள பெரிய குளத்தினால் தான் இந்த ஊர் பேராவூரணி(பெரிய+ஊரணி) பெயர்பெற்றது என கூறப்படுகிறது. இந்த பேராவூரணி பகுதியைச்சுற்றி பல கிராமங்கள் அமைந்துள்ளன.

நில அமைப்பு:
கல்லணை மூலம் நீர்பாசனம் பெறும் இந்த பேராவூரணியின் வழியே பல ஆறுகள் ஓடுகின்றன. பேராவூரணியானது ஏராளமான விவசாயப்பகுதிகளையும், நீர்நிலைகளையும், கடலோரப்பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.இந்த பேராவூரணியை சுற்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களான புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட நகரங்கள் மிகக்குறைந்த தொலைவில் அமைந்துள்ளன.
வாழ்வாதாரம்:
பேராவூரணி பகுதி மக்களின் மிகமுக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. மேலும் மீன்பிடித்தொழிலும் இப்பகுதியில் பலரால் செய்யப்பட்டுவருகிறது. பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை பொறுத்தவரையில் தென்னை மற்றும் நெல் உற்பத்தியில் இப்பகுதி மிகமுக்கிய பங்குவகிக்கிறது. தென்னை மரங்கள் அதிகமாக காணப்படும் இந்த பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளே ஒட்டுமொத்த மாநிலத்தின் தென்னை உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பகுதிமக்கள் பலரும் தென்னை சார்ந்த தொழில்களான கயிறு திரித்தல், கொப்பரை போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் தமிழகம், ஆந்திரா முழுவதும் பல கூல்டிரிங்ஸ் கடைகளை இப்பகுதியை சேர்ந்த மக்களே நடத்திவருகின்றனர். இதுமட்டுமின்றி கூல்டிரிங்ஸ் பெட்டி தயாரிப்பிலும் பேராவூரணியே மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது.மேலும் பல பேராவூரணி பகுதிமக்கள் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பரவலாக பணிபுரிந்துவருகின்றனர். இப்பகுதியில் OPAL Electrics எனும் மின்னணு சாதன தொழிற்சாலையும், மீன்பிடி வலைகள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகளும், தென்னை நார் மூலமாக கயிறு திரிக்கும் தொழிற்சாலைகளும் அதிகமாக செயல்பட்டுவருகின்றது.
நிர்வாகம்:
இந்த பேராவூரணி தனி தாலுக்காவாகவும், தனி ஒன்றியமாகவும் செயல்பட்டுவருகிறது. இந்த பேராவூரணி நகரமானது, தமிழக அரசால் தேர்வுநிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேராவூரணி வட்டத்தில் பல கிராம ஊராட்சிகளும், ஒன்றியங்களும் அமைந்துள்ளது. இந்த பேராவூரணி பட்டுக்கோட்டையை போக்குவரத்து நிர்வாக மாவட்டமாகவும், கல்வி மாவட்டமாகவும் கொண்டுள்ளது.
அரசியல்:
பேராவூரணியானது தமிழகத்தின் 177 ஆவது சட்டப்பேரவைத்தொகுதியாக உள்ளது. இதன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தேமுதிகவை சேர்ந்த திரு.அருண்பாண்டியன் தனது பதவியை சில மாதங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். இதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றப்பொதுத்தேர்தலில் அஇஅதிமுகவைச்சேர்ந்த திரு.மா.கோவிந்தராசு அவர்கள் பேராவூரணியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பொதுதொகுதியாக உள்ள இத்தொகுதியை அஇஅதிமுக அதிகபட்சமாக ஆறு முறைக்கு மேலும், திமுக ஒரு முறையும் கைப்பற்றியுள்ளது. 1967 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத்தொகுதியிலிருந்து உருவாக்கப்பட்ட இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.M.R.கோவேந்தன், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இந்த பேராவூரணி தொகுதி இதுவரை சுமார் 11 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த திரு.நா.அசோக்குமார் இருந்துவருகிறார்.
மக்கள் தொகை:
பேராவூரணியின் 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 21,025 பேர் வசிக்கின்றனர். இதன் ஒட்டுமொத்த சராசரியில் ஆண்கள் 49% பேரும், பெண்கள் 51% பேரும் உள்ளனர். இதில் ஒட்டுமொத்த படிப்பறிவு பெற்றவர்களின் சராசரி 70% ஆகும். இது தேசிய அளவிலான குறைந்தபட்ச சராசரியான 59.9% விட அதிகமானதாகும். இதில் ஆண்கள் 79%, பெண்கள் 63% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
பேராவூரணியின் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 22,084 பேர் வசிக்கின்றனர். இதன் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஆண்கள் 10,643 பேரும், பெண்கள் 1075 பேரும் உள்ளனர். இதில் ஒட்டுமொத்த படிப்பறிவு பெற்றவர்களின் சராசரி 84.69% ஆகும். இது மாநில அளவிலான குறைந்தபட்ச சராசரியான 80.09% விட அதிகமானதாகும். இதில் ஆண்கள் 91.17%, பெண்கள் 78.73% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
மதப்பரவல்:
பேராவூரணியானது பல மதங்களை பரவலாக கொண்டுள்ளது. இப்பகுதிகளில் இந்துக்களே அதிகமாக வசிக்கின்றனர். சிறுபான்மையினர் குறைந்த அளவே காணப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் சாதி, மத பேதமின்றி அனைவரையும் சகோதர, சகோதரிகளாகவே நடத்துகின்றனர். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, பேராவூரணியில் இந்துக்கள் 83.45% பேரும், 10.3% இஸ்லாமியர்களும், 6.52% கிருஸ்தவர்களும் வசிக்கின்றனர்.
பள்ளி,கல்லூரிகள்:
பேராவூரணியை பொறுத்தவரையில் பலரும் கல்வியில் கைதேர்ந்தவர்களே. இதற்கு காரணம் இப்பகுதியில் அதிகமாக காணப்படும் பள்ளிகளே. இப்பள்ளிகளில் படிக்கும் எண்ணற்ற மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் இடம் பிடித்துவருகின்றனர். ஆனாலும் இப்பகுதியில் உயர்கல்விக்கு தேவையான வசதிகள் போதுமான அளவிற்கு இல்லை என்றே கூறவேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி மாணவ, மாணவிகள் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றே கல்வி பெற்றுவந்தனர். இதைப்போக்க சில மாதங்களுக்கு முன்னர் பேராவூரணியில் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புதிய அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிமுடிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. பேராவூரணி பகுதியில் பல பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டுவருகிறது. இதன்படி,
1. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
2. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி
3. .அட்லாண்டிக் இண்டர்நேஷனல் ரெசிடெண்சி பள்ளி.
4. .டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
5. மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
6. வீ.ஆர்.வீரப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி.
7. அகஸ்ட் சியோன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
8. ராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
9. லியோஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
10. ஸ்ரீ வெங்கடேஷ்வரா CBSE பள்ளி
11. அண்ணா பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை
12. SMR கிழக்குக்கடற்கரை சாலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி
13. ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
14. டாக்டர்.கலாம் பாலிடெக்னிக் கல்லூரி
15. மனோரா பாலிடெக்னிக் கல்லூரி
போக்குவரத்து:
பேராவூரணி நகரமானது தமிழகத்தின் பல இடங்களுக்கும் போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. பேராவூரணி புதிய அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நடைபெறும் சாலை போக்குவரத்து மூலமாக பலரும் பல இடங்களுக்கு பயணித்துவருகின்றனர். பேராவூரணியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் சென்னையும், 70 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிராப்பள்ளியும், 270 கிலோ மீட்டர் தொலைவில் மதுரையும், 50 கிலோ மீட்டர் தொலைவில் புதுக்கோட்டையும், 68 கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சாவூரும், 25 கிலோ மீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டையும், 20 கிலோ மீட்டர் தொலைவில் அறந்தாங்கியும் அமைந்துள்ளது.
பேராவூரணியில் நடைபெற்றுவந்த இரயில் சேவை அகலரயில் பாதை விரிவாக்கப்பணிகளுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பேராவூரணியிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ளது.
பொருளாதாரம், வங்கிகள்:
பேராவூரணியானது பொருளாதாரத்தை பொறுத்தவரையில் வளர்ந்துவரும் நகரமாகவே காட்சியளிக்கிறது. இதனை பேராவூரணியில் அமைந்துள்ள பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தெளிவுபடுத்துகின்றன. இதன்படி பேராவூரணியில் உள்ள வங்கிகளின் விவரம் பின்வருமாறு.
1. பாரத ஸ்டேட் வங்கி(SBI)
2. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB)
3. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா(COB)
4. கனரா வங்கி
5. ICICI வங்கி
6. KVB வங்கி
7. லெட்சுமி விலாஸ் வங்கி
8. தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
பேராவூரணியின் பெருமைகள்:
1. தமிழகத்தின் ஈடு இணையில்லா வரலாற்று நினைவு கோபுரமான மனோரா, பேராவூரணியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் கடலோர நகரமான மல்லிப்பட்டிணம் அருகே அமைந்துள்ளது.
2. பேராவூரணி ஏந்தல் அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயிலின் 12 நாள் சித்ரா பெளர்ணமி திருவிழா பல பகுதிகளிலிருந்தும் திரளானோரை பேராவூரணிக்கு ஈர்க்கிறது.
3. மொய்விருந்து என்னும் வட்டி இல்லா கடன் பெறும் வினோத விழா தமிழகத்திலேயே இப்பகுதியில் தான் நடைபெறுகிறது.
4. தென்னை மற்றும் கயிறு உற்பத்தியில் மாநிலத்திலேயே முதலிடம்.
5. கூல்டிரிங்க்ஸ் பெட்டி தயாரிப்பதிலும், கூல்டிரிங்க்ஸ் கடைகள் நடத்துவதிலும் மாநிலத்திலேயே முதலிடம்.
6. பேராவூரணியில் நடத்தப்படும் மாட்டுவண்டி, குதிரைவண்டி பந்தயம் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே பிரசித்திப்பெற்றதாகும்.
பேராவூரணியின் பிரபலங்கள்:
1. திரு.M.R.கோவேந்தன், முன்னாள் தமிழக அமைச்சர்
2. திருமதி.உமா.IFS,
3. திரு.அன்புச்செல்வன்.IAS
4. திரு.தினேஷ் கிருஷ்ணன், திரைப்பட ஒளிப்பதிவாளர்
5. திரு.சரவணன், திரைப்பட இயக்குனர்
6. திரு.அகத்தியன், திரைப்பட இயக்குனர்
பேராவூரணியில் அரசு அலுவலகங்கள்:
பேராவூரணியில் பல அரசு அலுவலகங்கள் அரசு சேவையை வழங்க அமைந்துள்ளது. இதில்
1. பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம்
2. பேராவூரணி சார்பதிவாளர் அலுவலகம்
3. பேராவூரணி நகர காவல்நிலையம்
4. பேராவூரணி அரசினர் காமராஜர் தாலுக்கா மருத்துவமனை
5. பேராவூரணி நகர தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம்
6. பேராவூரணி அரசினர் கருவூலம்
7. பேராவூரணி ஒன்றிய அலுவலகம்
8. பேராவூரணி தேர்வுநிலைப்பேரூராட்சி அலுவலகம்
9. தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
10. பேராவூரணி வேளாண் விரிவாக்க மையம்
11. பேராவூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
எதிர்பார்ப்புகள்:
பேராவூரணி மக்களிடையே பல எதிர்பார்ப்புகள் உள்ளன. இவற்றில் பேராவூரணியில் சார்பு நீதிமன்றம், மகளிர் காவல்நிலையம், தென்னை வணிக வளாகம், புதிய அரசினர் பாலிடெக்னிக்கல்லூரி, அரசினர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, ஒருங்கிணைந்த பேராவூரணி கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னும் பல பெருமைகளை ஒருங்கே கொண்ட தஞ்சை தரணியின் ஈடுஇணையில்லா பேராவூரணி, ஒரு மண்ணுலக சொர்க்கம் தானே???

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: