இந்த ஆண்டும் மேட்டூர் தண்ணீர் கடைமடை பகுதியில் உள்ள ஆறுகளை எட்டவில்லை. பரவலாக பெய்த மழை, மேட்டூர் அணையில் நீர் இருப்பு போன்றவற்றால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். இந்த நிலையில் கடைமடை ஆறுகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். பேராவூரணி அருகே உள்ள பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், மருங்கப்பள்ளம், வீரியங்கோட்டை, மரக்காவலசை, முடச்சிக்காடு, கைவனவயல், கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், விளங்குளம், சோலைக்காடு, முதுகாடு,சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆற்றில் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் பேராவூரணி பகுதியில் பூக்கொல்லை, குருவிக்கரம்பை, வாத்தலைக்காடு உள்ளிட்ட இடங்களில் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தாமதமாக தொடங்கி உள்ளனர். பருவம் தவறி நடப்பட்ட பயிரால் மகசூல் பாதிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக சேதுபாவாசத்திரம் பகுதியில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. கோடை சாகுபடியை கைவிட்டு பல ஆண்டுகளாகி விட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இப்பகுதியை வந்தடைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி சம்பா சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளோம். ஆற்று தண்ணீர் வராததால் தாமதமாக பணிகளை தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

0 coment rios: