கடைமடையை போதிய மழை ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது.
பேராவூரணி கடைமடை பகுதியை வடகிழக்கு பருவமழை வஞ்சித்ததால் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பேராவூரணி , சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான பருவமழை கிடையாது. குறிப்பாக கடந்தாண்டு முழுமையாக மழை பொய்த்துவிட்டது. இதனால் ஏரி, குளங்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜீவாதாரமாக கருதப்பட்ட தென்னை சாகுபடி கேள்விக்குறியானது.
இந்நிலையில் கடந்த மாதம் எதிர்பாராத விதமாக திடீரென பெய்த மழையால் ஓரளவு நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு கட்டுக்குள் வந்தது. கடந்தாண்டு விவசாயம் கைவிட்டுபோன நிலையில் விவசாயிகள் வறுமையில் தள்ளப்பட்டனர்.இந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பி காலதாமதமாக அணை திறக்கப்பட்டாலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைமடையில் நடந்து வரும் ஒருபோக சம்பா சாகுபடியை இந்தாண்டு செய்து விடலாம் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதற்கு மாறாக அணை திறந்து ஒருமாதமாகியும் தண்ணீர் கடைமடையை எட்டிக்கூட பார்க்கவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் மழை பெய்யும் நேரத்திலாவது தண்ணீர் வரும் சாகுபடி செய்து விடலாம் என நேரடி பாசன விவசாயிகளும், வடகிழக்கு பருவமழையால் பெரிய ஏரிகள் நிரம்பி ஒருபோகம் சாகுபடி செய்து விடலாம் என ஏரிப்பாசன விவசாயிகள் நினைத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வெள்ளசேதம் ஏற்பட்டாலும் கடைமடையை பருவமழை முழுமையாக வஞ்சித்து விட்டது. பருவமழை துவங்கி ஒரு வாரமாக கடைமடையில் சாரல் மழையே பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டும் சாகுபடி பொய்த்து போகும். அதேநேரம் எதிர்காலத்தில் குடிநீர் வெளிமாவட்டங்களில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடைமடை விவசாயிகள் கவலை
யோடு கூறுகின்றனர்.
0 coment rios: