மானிய விலையில் வேளாண் கருவிகள், இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
வேளாண்மையை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் பல்வேறு வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்க நிகழாண்டில் ரூ. 31.06 கோடி மானியம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின்கீழ் நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், இயந்திர கலப்பை, சுழற் கலப்பை, குழி தோண்டும் கருவி, விசை களையெடுக்கும் இயந்திரம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம், தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான்கள், தென்னை மரம் ஏறும் கருவி, நேரடி நெல் விதைப்புக் கருவி, டிராக்டர், இயந்திர கலப்பை ஆகியவற்றால் இயக்கப்படும் இதர வேளாண் கருவிகளும், இயந்திரங்களும் மானிய விலையில் வழங்கப்படும்.
இத்திட்டத்தில், சிறு, குறு ஆதி திராவிட பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 40 சதம் வரையும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மானிய தொகை ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையலாம்.
இத்திட்டதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை தஞ்சாவூர் மாவட்டச் செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளரை 9443892830 என்ற செல்லிடப் பேசி எண்ணிலோ அல்லது கும்பகோணம் உதவி செயற் பொறியாளரை 9442399911 என்ற எண்ணிலோ, பட்டுக்கோட்டை உதவி செயற் பொறியாளரை 9442399911 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
0 coment rios: