பேராவூரணி வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில், தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. செளந்தர்ராஜன் தலைமை வகித்துப் பேசியது:
பிறந்த குழந்தை முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தாய்ப்பாலுடன் உப்பு சர்க்கரை கரைசல் கொடுக்கலாம். 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் மாத்திரை வழங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
கை, கால்களை சோப்பின் மூலம் கழுவுவதால் நோய்த்தொற்று வராமல் தடுக்கலாம். அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாத்திரை, உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது. இதனால், நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கலாம். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள் மூலம் குழந்தைகளுக்கு கை கழுவுவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இதனால், டெங்கு, சிக்குன்குனியா, வயிற்றுப்போக்கு, பன்றிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும், பொதுவெளியில் மலம்கழிக்காமல் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மருத்துவர் அறிவானந்தம், இலக்கியா, கீர்த்திகா, சிவரஞ்சனி, தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப் சிங்க், அமுதவாணன், தவமணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 coment rios: