பேராவூரணியில் புதுக்கோட்டை சாலையில் கட்டிட இடிபாடு கழிவுகள், தென்னை மற்றும் பனை மரத்துண்டுகள், குப்பைகள் ஆகியவற்றை சாலையோரம் கொட்டியும், சில நேரங்கள் தீ வைத்தும் எரித்துச் செல்லும் மர்ம நபர்களின் செயல்களால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர, கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேராவூரணியில் ஊர் பெயருக்கு காரணமான பெரியகுளம் என்ற ஏரி உள்ளது. இது பேராவூரணி பெரியார் சிலையில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் புதுக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ளது. கடந்த பல வருடங்களாகவே ஆக்கிரமிப்பில் உள்ள பெரியகுளம் ஏரி, தனது பரப்பை இழந்து குறுகி வருகிறது. நீண்ட நெடுங்காலமாக தூர் வாரப்படாததால் இந்த ஏரி கருவேல மரங்கள் நிறைந்து, மண் மேடிட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் கட்டிட இடிபாடுகளையும், தேவையின்றி வெட்டி எறியப்படும் தென்னை, பனைமரங்கள், மரத்தின் வேர்கள் மற்றும் குப்பைக் கழிவுகளை ஏரியின் ஓரத்தில் கண்காணிப்பு இல்லாத நள்ளிரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இந்த குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் பலமுறை அப்புறப்படுத்தியும், மீண்டும் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி விட்டதால் தற்போது பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
இதனால் ஏரியை நிறைத்த குப்பைகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாலையை ஆக்கிரமித்து வருகின்றன. இதன்காரணமாக மாநில நெடுஞ்சாலையான இந்த சாலை குறுகலாக காணப்படுகிறது. இவ்வழியே நாள்தோறும் பள்ளி வாகனங்களும், தனியார், அரசு பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் மிதிவண்டிகளில் சென்று வருகின்றனர்.
சாலையோரம் சேர்ந்து வரும் குப்பைகளாலும், தீ வைத்து எரித்து விடுவதால் ஏற்படும் புகை மாசுகளாலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில், விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும், ஒவ்வாமை, ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மேலும் இப்பகுதியில் கோழிக்கழிவுகளும் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி பேராவூரணி நகரச் செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி கூறுகையில், "சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. பேரூராட்சி மற்றும் காவல்துறை கவனம் செலுத்தி குப்பைகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையை சேதப்படுத்தும் நபர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் போராட்டத்தை நடத்தும்" என்றார்.
நன்றி:தீக்கதிர்
0 coment rios: