தஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரம் கிலோ ரூ.20–க்கு விற்பனை
தஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிலோ ரூ.20–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோடைகாலம்
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை நாளுக்கு நாள், அதிகரித்த வண்ணம் உள்ளது.
மக்களும் வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இளநீர், மோர், குளிர்பானங்கள், தர்ப்பூசணி போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகிவருகிறார்கள். கோடை காலம் தொடங்கியதையொட்டி தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் தர்ப்பூசணி பழங்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
தர்ப்பூசணி
தஞ்சை மருத்துவகல்லூரி சாலை, சீனிவாசபுரம் பகுதி, காந்தி மார்க்கெட், நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட தஞ்சை மாநகரின் பல்வேறு இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. தஞ்சைக்கு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு லாரிகளில் பழங்கள் கொண்டு வரப்படுகிறது.
தற்போது தஞ்சையில் 1 கிலோ தர்ப்பூசணி பழம் கிலோ ரூ.20–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் கோடை வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அதிக அளவில் தர்ப்பூசணி பழங்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் தர்ப்பூசணி பழங்கள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
விளைச்சல் குறைவு
இது குறித்து தர்ப்பூசணி பழ வியாபாரி பூமிநாதன் கூறுகையில், ‘‘நாங்கள் தர்ப்பூசணி பழங்கள் விளையும் இடத்திற்கு சென்று கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை கொள்முதல் செய்கிறோம். அதனை லாரிக்கு எடுத்துச்செல்வதற்கான சுமைகூலி, லாரி வாடகை ஆகியவை சேர்த்து 1 கிலோ தர்ப்பூசணி பழங்கள் ரூ.20–க்கு விற்பனை செய்கிறோம். வறட்சி காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தாலும் தற்போது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது’’என்றார்.
0 coment rios: