தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை-எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் கடந்த சில வருடங்களாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இவற்றுடன் 2 அடி கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.100 ஆகியவை கடந்த ஆண்டு வழங்கப்பட்டன.
இந்த வருடம் பொங்கல் பரிசு அரசு சார்பில் வழங்கப்படுமா என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டு வந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பச்சரிசி, சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது ரூபாய் நோட்டு பிரச்சனை நீடித்து வருவதால் ரொக்கம் ரூ.100 தருவதற்கு பதிலாக பொங்கல் செய்வதற்கு வசதியாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை வழங்குகிறார்கள்.
பொங்கல்பரிசு அனைத்து ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உணவு வழங்கல் துறையும், சிவில் சப்ளை துறையும் செய்து வருகின்றன.
பொங்கல் பரிசு கொடுப்பதில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை போதுமான அளவு தயாராக இருக்கின்றன. முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகியவை உடனடியாக கொள்முதல் செய்து வினியோகிக்க அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதல் மற்றும் 2-வது வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். இதனால் வரும் 6-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ரேஷன் கடைகள் செயல்படாது. 2 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது.
அதனால் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு 7-ந்தேதி (சனிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து 6 நாட்கள் வினியோகிக்கப்படும். அதாவது 12-ந்தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் பரிசு அரிசி பெறக்கூடிய பச்சை நிற ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். சர்க்கரை பெறக்கூடிய வெள்ளை நிற கார்டுகளுக்கு கிடையாது.
இதுகுறித்து சிவில் சப்ளை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான பச்சரிசி, சர்க்கரை தயாராக இருக்கின்றன. மற்ற பொருட்கள் உடனடியாக கொள்முதல் செய்து வழங்க அனைத்து பணிகளும் தொடங்கி விட்டன.
வருகிற 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 6 நாட்கள் தொடர்ந்து பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும். முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து 50 கிராம் ஒரு பாக்கெட்டில் அடைத்து வினியோகிக்கப்படும்.
சர்க்கரை, பச்சரிசி வாங்குவதற்கு பொதுமக்கள் பை கொண்டு வர வேண்டும். ரேஷன் கடைகளில் பை வழங்கப்படமாட்டாது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினாலும் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி தடைபடாது. அதுவும் நடைபெறும் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களுக்கு வசதியான நேரத்தில் உள்தாள்களை இணைத்து கொள்ளலாம். உள்தாள் இணைப்பதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது.
0 coment rios: