பேராவூரணி அருகே உள்ள ஏனாதிகரம்பையில் உள்ள மாயம்பெருமாள் கோவிலில், வருடந்தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமையன்று ஏனாதிகரம்பை கிராமத்தினர் சமையல் செய்வதற்காக தென்னங்கீற்றுகளால் தட்டுப்பந்தல் அமைத்து இருந்தனர். சமையல் வேலைகள் முடிந்து, அன்னதானமும் நடைபெற்றது. சமையலுக்கு பயன்படுத்திய விறகுகளில் சில எரியாமல் இருந்ததாகவும் அதனை முழுமையாக அணைக்காமல் சமையலில் ஈடுபட்டவர்கள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
சனிக்கிழமை மாலை 4 மணியளவில் காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த வைக்கோலில் பற்றிய தீ சமையல் பந்தலில் பரவி பந்தல் முழுமையும் எரிந்து நாசமானது.இது இயற்கையாக நடந்தது அல்ல. மாற்று தரப்பினர் செய்த சதிச்செயல் எனக் கூறி ஏனாதிகரம்பை பேருந்து நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமரன், உதவி ஆய்வாளர் தருமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடச் செய்தனர்.
இதனால், பேராவூரணி புதுக்கோட்டை வழித்தடங்களில் சனிக்கிழமையன்று மாலை 1 மணி நேரம் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. மேலும், சமையல் பந்தலில் தீ விபத்து நடந்தது எப்படி என்பது பற்றி திருச்சிற்றம்பலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
0 coment rios: