கல்லணைக்கால்வாயில் ரூ.5 கோடியில் பாலம் கட்டும் பணி கலெக்டர் சுப்பையன் ஆய்வு
தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையத்தில் கல்லணைக்கால்வாயில் ரூ.5 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கல்லணைக்கால்வாயில் பாலம்
தஞ்சையை அடுத்த ராமநாதபுரம் ஊராட்சியில் தஞ்சை- பூதலூர் இடையில் ரெட்டிப்பாளையத்தில் கல்லணைக்கால்வாயில் இருந்த பாலம் சேதம் அடைந்து காணப்பட்டது. எனவே இந்த இடத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ரெட்டிப்பாளையத்தில் உள்ள கல்லணைக்கால்வாயில் நெடுஞ்சாலைத்துறையின் நபார்டு மற்றும் கிராம சாலையின் மூலம் ரூ.4 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது பாலம் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நேரில் ஆய்வு
புதிய பாலம் கட்டும் பணியினை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், “கல்லணைக் கால்வாயின் மேல் கட்டப்பட்டு வரும் பாலத்தின் இருபுறங்களில் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலை ஆகியவற்றை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் பாலத்தின் இருபுறமும் நடுவில் அமைந்துள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலை கோட்ட பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் பாபுராமன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
SHARE THIS
0 coment rios: