பேராவூரணி அருகே ஏரி, குளங்களை நிரப்ப தண்ணீர் விட வேண்டும் மக்கள் நேர்காணல் முகாமில் கோரிக்கை.
பேராவூரணி அருகே உள்ள ஏரி, குளங்களை நிரப்ப தண்ணீர் திறந்து விட வேண்டுமென மக்கள் நேர்காணல் முகாமில் கோரிக்ைக விடுக்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள பெத்தனாட்சிவயலில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. டிஆர்ஓ சக்திவேல் தலைமை வகித்தார். பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முகாமில் 85 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அப்போது கிராம மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி தலைவர் அப்துல் ஜபார் பேசும்போது: பெத்னாட்சிவயலில் 125 குடும்பங்கள் உள்ளன இதில் ஒரு வீட்டுக்கு கூட மின்வசதி கிடையாது. இங்கு குடி இருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடையாது. மேலும் பாதரக்குழி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் போதுமானதாக இல்லை.
எனவே நீர்த்தேக்க தொட்டி தனியாக அமைக்க வேண்டும். ஊமத்தநாடு பெரிய ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வாரி (வாத்தலைஆறு) முழுவதுமாக நெய்வேலி காட்டாமணக்கு செடி மூடியுள்ளது. இதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை திறந்து 25 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே ஏரி, குளங்களை நிரப்ப தண்ணீர் வேண்டும் என்றார். இதைதொடர்ந்து 7 பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, 19 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 16 பேருக்கு பட்டா மாறுதல் என 42 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி டிஆர்ஓ சக்திவேல் பேசும்போது, நத்தம் புறம்போக்கில் இருப்பவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேய்ச்சல் தரிசு நிலங்களில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளிடம் ஆலோசித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊமத்தநாடு ஏரியை தூர்வார உத்தரவிடப்படும் என்றார்.
0 coment rios: