நவம்பர்.3 ஆம் தேதி வரை கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தென்மேற்கு வங்க கடலில் தமிழகத்தின் அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது.இதன் காரணமாக திங்களன்று அதிகாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களிலும் கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்களன்று முதல் 5 நாட்களுக்கு (நவ. 3-ந்தேதி வரை) மழை தீவிரம் அடையும் என்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், புதுவையிலும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து அடைமழை போல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.சென்னையில் அனைத்துப் பகுதியிலும் மழை கொட்டுகிறது. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்வோர், பள்ளிக் கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.
தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.சென்னையில் கடந்த சில நாட்களாக லேசான அளவுதான் மழை பெய்தது. இன்றுதான் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு மழை பெய்கிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையின் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து குடிநீர் பிரச்சனை நீங்கும். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 4.6 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதுச்சேரியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
0 coment rios: