ஆதி சிவசக்தி ஞானபீடத்தில் 10 ஆயிரத்து 8 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கின்னஸ் சாதனை.
பட்டுக்கோட்டையை அடுத்த கார்காவயல் கிராமத்தில் ஆதி சிவசக்தி சித்தர் ஞானபீடம் உள்ளது. இங்கு 10 ஆயிரத்து 8 பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு திருவிளக்கு பூஜை செய்து உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் பிற்பகல் பட்டுக்கோட்டை வெங்கிடுசுப்பையா சுவாமிகள் ஆலயத்தில் இருந்து ருத்ர சித்தர் தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக நாடியம்மன் கோவில் வரை யானை, ஒட்டகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் இந்து சக்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
கின்னஸ் சாதனை
அதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஆதிசிவசக்தி சித்தர் ஞானபீடத்தில் 10 ஆயிரத்து 8 பெண்கள் கலந்து கொண்டு 30 வினாடியில் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் லண்டனில் இருந்து வந்த கின்னஸ் சாதனை நிறுவன நடுவர் ஸ்வப்னில் தலைமையில் குழுவினர் கலந்து கொண்டனர். இந்த திருவிளக்கு பூஜை உலக சாதனை என்று அறிவித்து நடுவர் ஸ்வப்னில், முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கராஜன் முன்னிலையில் ருத்ர சித்தருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
விழாவில் 50 பேருக்கு சைக்கிள்கள், 50 பேருக்கு தையல் எந்திரங்கள், 5 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் உள்ளிட்டவைகளை ஆதிசிவசக்தி ஞானபீட ருத்ரசித்தர் வழங்கினார். இதற்கு முன்பு கேரளாவில் 2016-ம் ஆண்டு 1500 விளக்குகள் 30 வினாடியில் ஏற்றியது உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: