எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பேராவூரணி மெய்ச்சுடர் இதழ்.
மெய்ச்சுடர் என்ற இந்த இதழ் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்து எட்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.
31.07.2010 இல் நிதர்சனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இதழ் தனது இரண்டாவது இதழிலேயே மெய்ச்சுடர் என்னும் தமிழ்ப் பெயர் தாங்கி வெளிவரத் தொடங்கியது. பேராவூரணி பகுதியின் பல்வேறு செய்திகளையும், சமூக மாற்றத்திற்கான கருத்துக்களையும் முற்போக்கான முறையில் எடுத்துரைக்கும் பணியை செவ்வனே செய்து வருகிறது. சமூகத்தில் போற்ற வேண்டியதை பாராட்டுவதும், தூற்ற வேண்டியதை இடித்துரைப்பதும் மெய்ச்சுடர் வழி தொடர்ந்து நடந்து வருகிறது.
அச்சு இதழாக வெளிவந்து கொண்டிருந்த மெய்ச்சுடர் பெரும் பொருளாதார நெருக்கடியினாலும், ஆள் பற்றாகுறையினாலும் பிளாக்கர் மற்றும் முகநூல் வழியாக மட்டுமே வெளிவர வேண்டிய நிலையில் உள்ளது. எவ்வளவு தொழில் நுட்பங்கள் தகவல் தொடர்புத் துறையில் வந்திருந்தாலும் அச்சு ஊடகத்தின் பணி அளப்பரியது. பாமர ஏழை மக்களையும் சென்றடையும் வல்லமை கொண்டது அச்சு ஊடகம். தந்தை பெரியார் தனது வாழ்நாள் பணியாக தொடர்ந்து செய்து வந்த பணி மக்களிடம் உரையாற்றுவதும், செய்தித்தாள் நடத்தி வந்ததும்தான். அவரின் செய்தித்தாள் பணி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. தந்தை பெரியாரின் காலகட்டத்தையும் விட செய்தித்தாள் ஊடகத்தின் பணி இன்று மிகவும் அவசியமாகவேப் படுகிறது.
அச்சு ஊடகமாக - செய்தி இதழாக மீண்டும் மெய்ச்சுடர் இதழை தொடர விழைகிறோம். விரைவில் அதற்கான பணிகளைத் தொடருவோம். எங்களின் இச்சிறிய சமூகப் பணியையும் பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
நா. வெங்கடேசன்
ஆசிரியர், மெய்ச்சுடர்.
31.07.2017
0 coment rios: