தில்லியில் தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் பொதுச்செயலாளர் வி.சி.முருகையன் தலைமை வகித்தார். நிகழ்வில் கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன், கே.வி.முனியன், வேம்பை சின்னத்துரை, பைங்கால் மதியழகன், ப.மூர்த்தி, வீரக்குடி ராசா, பொதுவுடைமைச் சிந்தனையாளர் அருள்மொழி, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், காவிரிப் படுகைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பழ.திருமுருகன், மெய்ச்சுடர் ஆசிரியர் நா.வெங்கடேசன், மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒன்றிய அமைப்பாளர் தா.கலைச்செல்வன் ஆகியோர், விவசாயிகளின் வேளாண் கடனை தள்ளுபடி செய்யவேண்டும், வரட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழ் நாட்டு விவசாயிகளுக்கு வரட்சி கால இழப்பீடாக ஏக்கருக்கு ரூ,25000 வழங்க வேண்டும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு ரூ,10000 வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்க வேண்டும், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஏரி குளங்களை தூர்வாரி மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவுத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி முழக்கங்கள் செய்தனர். நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
நன்றி : மெய்ச்சுடர்
0 coment rios: