பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் நகர்புற பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர். 1985ம் ஆண்டு பேராவூரணியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை துவங்கப்பட்டது. துவங்கிய காலத்தில் 3 நகர்புற பேருந்துகளுடன் இயங்கிய பணிமனை, தற்போது 26 பேருந்துகளுடன் இயங்குகிறது. பேராவூரணி வட்டார தலை நகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளதால் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்திற்கு அரசுப் பேருந்துகள் மட்டுமே ஒரே வழி. சமீபகாலமாக பேராவூரணியிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட நகர்புற பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் அடிக்கடி நிறுத்தி விடுகின்றனர். குறிப்பாக பேராவூரணியிலிருந்து இரவு 9 மணிக்கு அறந்தாங்கி சென்று, அங்கிருந்து 10 மணிக்கு பேராவூரணி வரும் பேருந்தை திரும்ப வராமல் அறந்தாங்கியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் மதுரை, காரைக்குடி, குன்றக்குடி போன்ற ஊர்களுக்கு சென்றுவிட்டு அறந்தாங்கி வரும் பொதுமக்கள், பேராவூரணிக்கு செல்ல பேருந்து இல்லாமல் அறந்தாங்கியிலேயே இரவை கழிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் காரைக்குடி கல்லூரி, அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இதேபோல் பேராவூரணியிலிருந்து இரவு 8.30 மணிக்கு கொத்தமங்கலம் சென்று அங்கிருந்து பேராவூரணிக்கு வரும் பேருந்தை கொத்தமங்கலத்திலேயே நிறுத்திவிடுவதால் காய்கள் பயிரிடும் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் இரவில் நெடுவாசலிலிருந்து பேராவூரணிக்கு வரும் பேருந்தை நெடுவாசலிலிலேயே நிறுத்தி காலையில் வருவதால், பொதுமக்கள் ஆவணம் கைகாட்டியிலேயே இரவை கழிக்க வேண்டியுள்ளது. இதேபோல் எண். 96, 15, 6, உள்ளிட்ட பேருந்துகளையும் தங்களது இஷ்டத்திற்கு அதிகாரிகள் இயக்குகின்றனர். கடந்தசில வருடங்களாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளை நிறுத்திவிட்டு சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு பேராவூரணி பணிமனையிலிருந்து தினசரி இயக்கப்படவேண்டிய தூரம் கணக்கில் காட்டப்படுவதால் இதுகுறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. இதேநிலை நீடித்தால் பேராவூரணி பணிமனையை இழுத்து மூடிவிடுவார்களோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தினகரன்
0 coment rios: