காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துத் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு நடத்த வேண்டும் என்று முதன்முதலில் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதற்கு, இப்போது தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாக்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்பு காரணமாக என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்....
தனியார் பேருந்துகள் ஓடாது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இயக்கப்படும் மினிபேருந்துகளும் இயங்காது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் ஓடாது. பிற மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் சேவையும் நிறுத்தப்படுகிறது.
லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது.
தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகைக் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காது.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை.
தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று தனியார் பள்ளிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகள் நாளை மூடப்படுகிறது. தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் 16-ம் தேதி நடக்க வேண்டிய தேர்வு 17-ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடைகள் அடைப்பு.
பெட்டிக் கடைகள் முதல் மொத்த விற்பனை கடைகள் வரை மாநிலம் முழுவதும் உள்ள 22 லட்சம் கடைகள் மூடப்படும் என அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தெரிவித்துள்ளது. எனவே டீக்கடைகள் கூட செயல்படாது. கோயம்பேடு காய்கறிக்கடைகளும் அடைக்கப்படும். சென்னையில் உள்ள தியாகராய நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய வணிக நிறுவனங்களும் மூடப்படுகிறது.
பெட்ரோல் பங்குகள் அடைப்பு.
தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோஷியேசன் இந்த முழு அடைப்பில் பங்கேற்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,600 பெட்ரோல் பங்குகள் 16-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மூடப்படுகிறது. வாகனங்களுக்கு இன்றே பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எது திறந்திருக்கும்?
அரசு பள்ளிகள்
அரசு அலுவலகங்கள்
அரசு பேருந்துகள் ஓடும்
ரயில்கள் ஓடும்
பால் விற்பனை (காலை 6 முதல் 9 மணி வரை)
எது மூடப்பட்டிருக்கும்?
பெட்ரோல் பங்குகள்
தனியார் பள்ளிகள்
கடைகள், வணிக நிறுவனங்கள்
தனியார் பேருந்துகள் ஓடாது
லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது
மூடப்படும் ஆனால் மூடப்படாது.
ஹோட்டல்கள்.
3 மணி நேரம் பால் விற்பனை.
வெள்ளிக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு 1.50 லட்சம் பால்முகவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகளின் நலனைக்கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மணி முதல் மாலை 5 மணி வரை பால் விற்பனை இருக்காது. மளிகைக்கடைகள் முழு அடைப்பில் கலந்து கொள்வதால் அவர்கள் மூலம் விற்கப்படும் பால் விற்பனை 60 சதவிகிதம் அளவுக்கு பாதிக்கப்படும்.
ஹோட்டல்கள் இயங்கும்.
தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இந்த முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த குழப்பமான அறிவிப்பால் ஹோட்டல்கள் இருக்கும் ஆனால் இருக்காது என்ற சூழல்தான் நிலவுகிறது.
அரசு அலுவலகங்கள் இயக்கும்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள். இயங்கும். எனினும் பேருந்து வசதிகள் குறைவாக இருப்பதால் ஊழியர்கள் வருகை குறைவாகவே இருக்கும். இதனால் தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும் சேவைகள் பாதிக்கப்படும்.
ரயில்கள் ஓடும்.
மத்திய அரசு ஊழியர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே ரயில்கள் வழக்கம்போல் ஓடும். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். போலீஸ் பாதுகாப்புடன் மின் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் ஓடும்.
முழு அடைப்புக்கு தமிழக அரசு தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகளை இயக்கும் தி.மு.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள் பணிக்கு வரமாட்டார்கள். எனவே அ.தி.மு.க தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிகிறது.
அரசுப் பள்ளிகள் இயங்கும்.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கும். நாளை நடைபெற உள்ள காலாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகளுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்புப் போடப்படுகிறது.
0 coment rios: