தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுசார்பில் வருகிற 16-ந் தேதி தமிழத்தில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 1½லட்சம் பால் முகவர்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
அன்றைய தினம் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் விவசாய சங்கங்கள், வணிகர் நல அமைப்புகள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். வருகின்ற 16-ந் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தினையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை வணிக நிறுவனங்களும் காலை 6மணி முதல் மாலை 6மணி வரை விடுமுறை அளித்து இந்த போராட்டத்தில் பங்கேற்கிறோம். அன்று தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 1½ லட்சம் பால் முகவர்களும் தங்களது பால் விற்பனை நிலையங்களையும், விநியோக மையங்களையும் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மட்டும் அடைத்து இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள்.
அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சுமார் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பால் தட்டுப்பாடு ஏற்படும் எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களுக்கு தேவைப்படும் பாலினை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக விவசாயப் பெருமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், கர்நாடக அரசிற்கும், கர்நாடக அரசியல்வாதிகளுக்கும், கன்னட வெறியர்களுக்கும் நமது எதிர்ப்பை பதிவு செய்கின்ற வகையில் நடைபெற இருக்கின்ற மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: