கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவத்தை கண்டித்து நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகள்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது. தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி குழந்தைகள் பெரும்பாலும் வேன், ஆட் டோக்கள் மூலமே பள்ளிக்கு செல்கின்றனர். தனியார் பள்ளி வாகனங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் மாணவர்களை அழைத்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். அதனால் தனியார் பள்ளிகள் நாளை ஒருநாள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் இயங்காது
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேசன் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:- தமிழகத்தில் நாளை நடைபெறும் பந்த் காரணமாக தனியார் பள்ளிகள் இயங்காது. தனியார் பள்ளிகளுக்கு வேன்களில் வரும் மாணவர்கள் வருவதிலும் சிரமம் உள்ளது. பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. வேன், ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்கள் இதில் கலந்து கொள்வதால் பள்ளிகளை திறப்பது பல்வேறு பிரச்சினைகள் கஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதால் தனியார் பள்ளிகள் செயல்படாது என்று கூறினார்.
தமிழ்நாடு தனியார் பள்ளி வாகனம் கூட்டமைப்பு நலச்சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. சங்கத்தின் மாநில செயலாளர் பென்ஜமின் கூறியதாவது:- காவிரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். டிரைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இதை கண்டித்து நாளை நடக்கும் போராட்டத்தில் பள்ளி வேன் உரிமையாளர்கள், டிரைவர்கள் வாகனங்களை இயக்கவில்லை. சென்னையில் 25 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. அவை அனைத்தும் இயங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை பந்த் காரணமாக தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: