Friday, June 24, 2016

பேராவூரணி நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொப்பரைத் தேங்காய்களை தரம்பிரித்து கொண்டு வர வேளாண் வணிகத்துறை வலியுறுத்தல்



பேராவூரணி நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொப்பரைத் தேங்காய்களை தரம்பிரித்து கொண்டு வர வேளாண் வணிகத்துறை வலியுறுத்தல் :: வேளாண் வணிக துணை இயக்குனர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்.
துணை இயக்குநர், (வேளாண் வணிகம்) உதயகுமார் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு அறிவித்துள்ள கொப்பரை ஆதார விலை திட்டத்தின் மூலம் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நேரடி கொப்பரை கொள்முதல் நிலையங்களுக்கு கொப்பரை கொண்டு வர தென்னை விவசாயிகள் அடையாள அட்டை பெற வேண்டியது அவசியமாகும். அடையாள அட்டைபெற பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலூகா விவசாயிகள் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் உள்ள பட்டுக்கோட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க (பிஏபிசிஎம்எஸ்) அலுவலகத்திலும், ஒரத்தநாடு தாலுக்கா விவசாயிகள் ஒரத்தநாடு ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள ஓ.சி.எம்.எஸ்.
அலுவலகத்திலும் அடையாள அட்டை பெற வேண்டும். மாவட்டத்தின் இதர தாலுகா விவசாயிகள் மேற்குறிப்பிட்ட அலுவலகங்களிலிருந்து அடையாள அட்டை பெறலாம்.
அடையாள அட்டைபெற விவசாயிகள், விவசாயி என்பதற்கான ஆதாரத்துடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் செல்ல வேண்டும். அடையாள அட்டை பெற்றவுடன் அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் கிராம நிர்வாக அலுவலரிடம் நில விபரங்களைப் பெற்று கையொப்பம் பெற வேண்டும். பின்பு அதே அட்டையில் பகுதி உதவி வேளாண் அலுவலரிடமும் (விரிவாக்கப் பணியாளர்) கையொப்பம் பெற்று மீண்டும் அடையாள அட்டை பெற்ற அலுவலகத்தில் ஒப்படைத்து கொப்பரை கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எனவே, விவசாயிகள் கொப்பரை அடையாள அட்டைப் பெற மேற்கூறிய முறைகளைக் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொப்பரை கொண்டு வரும் விவசாயிகள் பூஞ்சானம் தாக்காத, தூசி மண் இல்லாத, உடையாத அரை கிண்ண வடிவமுடைய, முழு கொப்பரைகளை கொண்டு வர வேண்டும். முக்கியமாக கொப்பரையின் ஈரப்பதம் 6 சதத்துக்குள் இருக்க வேண்டும்.
6 சத ஈரப்பதத்திற்கு மேல் உள்ள கொப்பரைகளை கொள்முதல் செய்ய இயலாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகள் ஈரப்பதம் 6 சதத்திற்குள் கீழாக உள்ளவாறு நன்கு காய வைக்க வேண்டும். நல்ல சதைப்பற்றுள்ள கொப்பரைகள் உலர அதிக காலமாகும் என்பதால் அவற்றைப் பிரித்து தனியே உலர வைத்தால் சதைப்பற்று குறைவாக உள்ள கொப்பரைகள் விரைவில் உலர்ந்து விடும். மேலும் காய வைக்கும் பொழுதே சுருக்கம் அதிகமுள்ள கொப்பரைகளையும். உடைந்து போன சில்லுகளையும் தனியாகப் பிரித்து எடுத்து விட்டால் நல்ல தரமான கொப்பரைகள் விற்பனைக்கு கிடைக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி தரம் பிரித்து, கொண்டு வந்தால் உடனடியாக கொப்பரை விற்பனை செய்து, போக்குவரத்து செலவினங்களை குறைத்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரடி கொப்பரை கொள்முதல் நிலையத்தில் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.59.50-க்கு கொள்முதல் செய்யப்படும். இது அல்லாமல் முழுதாய் உள்ள பந்து வடிவ கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ. 62.40 க்கு கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: