Sunday, November 5, 2017

தட்டான் பூச்சியினங்கள் அழிவால் கொசு உற்பத்தி அதிகரிப்பு.





தமிழகத்தில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் தட்டான் பூச்சியினம் அழிந்து வருகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. மழையால் ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. மழை காரணமாக, தட்டான் பூச்சிகள் அதிகரித்துள்ளதால், காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் விரைவாக அழிந்துவிடும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். தட்டான் தாழப்பறந்தால் மழை வரும் என்பார்கள். ஆனால், இன்று மழையையும் காண முடியவில்லை, தட்டானையும் காணமுடியவில்லை. தட்டான்கள் பற்றி பல ஆராய்ச்சிகள், உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன. மிக நீண்ட தொலைவிற்கு வலசை போகும் திறன் கொண்ட ஒரே பூச்சியினம் தட்டான் தான். காற்றில் மேலடுக்கு நகர்வு மூலம், இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா சென்று விட்டு, மீண்டும் இந்தியா திரும்பும் திறன் தட்டானுக்கு மட்டுமே உண்டு. இது மணிக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு பறக்கும்.

இவற்றால் நின்று கொண்டே பறக்க முடியும். அப்படியே 180 டிகிரி தன்னை திருப்பிக்கொண்டு பின்னாலும் பறக்க முடியும். உலகில், ஏறத்தாழ 6 ஆயிரம் வகை தட்டான் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 503 இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. மேலும், 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பூமியில் வாழும் பூச்சியினம் தட்டான் மட்டுமே. உலகில் எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்க முடியும். கொசுக்களை கட்டுப்படுத்தும் பணி: மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தியை தடுப்பதில் தட்டான்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தட்டான்களுக்கு நீர்நிலைகள் தான் உலகம். இனச்சேர்க்கைக்கு பிறகு, பெண் தட்டான்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை நீர்நிலைகளில் இட்டுவிட்டுச் செல்லும். நம் வெப்ப மண்டல சூழலுக்கு அம்முட்டைகள், 10 நாட்களில் பொறித்து விடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் உயிரியானது, சுமார் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு வரை நீரிலேயே வாழும். அந்தக் காலகட்டத்தில் அதன் முக்கிய உணவு கொசுக்களின் லார்வாக்கள் தான். உண்டு முதிர்ச்சியடைந்ததும், நீரை விட்டு வெளியேறி விடும்.

தனது உடலை சுற்றியிருக்கும் உறை போன்ற பகுதியை உடைத்துக்கொண்டு இறக்கைகள் உடைய, முழுமையாக வளர்ச்சியடைந்த தட்டானாக வெளியே வரும். நீரில் இருக்கும் போதும், வெளியே பறக்க ஆரம்பத்த பிறகும் கொசுக்கள்தான் அதன் பிரதான உணவு. இரண்டு மீட்டர் தொலைவு வரை துல்லியமாக பார்க்கும் திறன் உடைய இரண்டு கூட்டுக்கண்கள் தட்டானுக்கு உண்டு. அவை, கொசுக்களை வேட்டையாடும் முறை வித்தியாசமானது. பறக்கும்போது தனது ஆறு கால்களையும் ஒன்று சேர்த்து கூடை போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். அந்தக் கூடைக்குள் விழும் கொசுக்கள் தான், அந்நேரத்து உணவு. பறந்துகொண்டே சாப்பிடும் அல்லது செடியில் அமர்ந்து கொண்டு சாப்பிடும். பின்னர், கூடை கால்களோடு மீண்டும் வேட்டைக்கு புறப்பட்டு விடும். கொசுக்களின் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தியது தட்டான்கள் தான். இன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை தட்டான்களின் உதவியால் விரட்டியிருக்கலாம். தற்போது நீர் நிலைகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் குளம், ஏரி போன்றவை மாயமாகின. இதனால் தட்டான் இனப்பெருக்கம்  பாதித்து கொசு உற்பத்திக்கு சாதகமாக அமைந்து விட்டது.

 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: