திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம்.
திருச்செந்தூர் கோயிலுக்குள் நுழையும்போது முதலில் நம்மை வரவேற்பது சின்னப்பாதேவர் பிரகார மண்டபம்தான். 20 அடி அகலத்தில் சுமார் 2000அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபம் கோயிலுக்கு கூடுதல் அழகு அளிப்பதோடு மட்டுமல்லாமல் பக்தர்களுக்கு நல்ல பயனளிப்பதுமாக இருந்துவருகிறது.
இந்த பிரகார கூரையை கொஞ்சம் கவனித்து பார்த்தால் சாதாரண கான்கிரீட் கூரைகளிலிருந்து மாறுபட்டிருப்பதை நாம் அறிய முடியும்.
4 அடி அகலம் 4அடி நீளத்தில் கூம்பு வடிவிலான கான்கிரீட் அடுக்குகளை வரிசைக்கு 5 வீதம் நேர்த்தியாக அடுக்கி வைத்திருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்தும் concrete shell எனும் தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்டவைகள்.
இவைகள் ஏதோ அழகுக்காக வடிவக்கபட்டுள்ளதாக நினைத்துவிட வேண்டாம், இதன் பின்னால் ஒரு கதை இருக்கிறது.!
இந்த மண்டபம் கட்டுவதற்கு முன்பு இந்த இடத்தில் ஓடுகளால் வேயப்பட்ட பிரகார மண்டபம் ஓன்று இருந்தது. ஆங்காங்கு ஓடுகள் உடைந்துபோயும் சில இடங்களில் ஓடுகளே இல்லாமல் பரிதாபமாக காட்சி அளிக்கும். திரு சின்னப்பா தேவர் இந்த இடத்தில் புதிதாக கான்க்ரீட் மண்டபம் அமைக்க எண்ணம் கொண்டு இந்து அறநிலையத்துறையை அணுகிய பொது, அவர்கள் சுமார் 18லட்சம் ரூபாய்க்கு ஒரு மதிப்பீட்டை தயாரித்து தேவரிடம் கொடுத்துள்ளார்கள்.
திரு சின்னப்பா தேவரின் ‘தேவர் பிலிம்ஸ்’ கம்பெனியில் 9 பங்குதாரர்கள். அதில் முருகனும் ஒருவர்.! வருடாவருடம் கம்பெனியில் கிடைக்கும் லாபத்தில், முருகனுக்குரிய பங்கில் ஏதாவது ஒரு முருகன் கோயிலுக்கு திருப்பணி செய்துவிடுவார்.!
1972 ல் ‘தேவர் பிலிம்ஸ்’ கம்பெனியில் முருகபெருமானுக்கு கிடைத்த பங்கு 7 லட்ச ரூபாய். அந்த பணத்தைக்கொண்டுதான் திருச்செந்தூர் பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு தேவர் முடிவு செய்திருந்தார். இருப்பினும் மதிப்பீட்டு தொகை 18லட்சம் என்றுதும் தேவர் திட்டத்தை கைவிட்டுவிட்டார்.
ஆனால் இந்த மதிப்பீட்டை தயாரித்த பொறியாளர் திரு தருமராஜ் என்பவருக்கு இந்த திட்டம் திருச்செந்தூரை விட்டுபோவதில் உடன்பாடில்லை. இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர். திருச்செந்தூர் முருகன் மேல் அளவில்லா பற்று கொண்டவர். கட்டிட பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
குறைவான செலவில் இந்த மண்டபத்தை எப்படி கட்டுவது என்பது குறித்து CSIR பொறியாளர்களை சந்தித்து அவர் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்களும் concrete shell முறையில் கூரை போடப்பட்டால் இது சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாக வழக்கத்திற்கு மாறாக, நடைமுறையில் இருக்கும் வடிவை (Design) விட்டுவிட்டு, புதிய வடிவில் கட்டிடங்கள் கட்டுவதற்கு எந்த அரசு துறை பொறியாளர்களும் துணிவதில்லை. இருப்பினும் திரு தருமராஜ் தனது தொழில்நுட்ப அறிவின் மேலுள்ள நம்பிக்கையில் புதிய வடிவில் புதிய மதிப்பீட்டை தயாரித்துள்ளார்.! மதிப்பீட்டு தொகையும் தேவர் ஏதிர்பார்த்த தொகைக்குள் அடைங்கி விட்டது.
அப்புறம் என்ன? கட்டுமானப்பணிகளை உடனே தேவர் ஆரம்பித்துவிட்டார்.! கட்டுமான பணிகளை முன்னின்று நடத்தியவர் தேவர் பிலிம்ஸின் மற்றுமொரு பங்குதாரரான திரு P.R. பொன்னுசாமி தேவர். அந்த நேரத்தில் இந்து அறநிலையத்துறையில் டெண்டர், காண்ட்ராக்ட் என்ற முறைகள் எல்லாம் கிடையாது. கோயில் திருப்பணி கட்டிடங்கள் கட்டுபவர்கள் அதற்கான வடிவை துறையிடம் பெற்றுக்கொண்டு துறை பொறியாளரின் மேற்பார்வையில் அவர்களே கட்டிக்கொள்ள வேண்டியதுதான். முழு மண்டபமும் 1974க்குள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.!
43 வருடங்கள் கழிந்துவிட்டன, இன்று வரை அந்த மண்டபத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டது என்றோ அல்லது வெடிப்பு வந்தது என்றோ யாரும் சொல்லாதவாறு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது!
திருச்செந்தூருக்கு செய்ய நினைத்ததை எப்படியும்
திருச்செந்தூருக்கே செய்ய வைத்துவிடுவார் திருச்செந்தூர் முருகன்.!
0 coment rios: