வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. 1.1.2018 அன்று தகுதி நாளாகக் கொண்டு கடந்த 3.1.2017 அன்று தஞ்சாவூர் கலெக்டரால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மீது சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2018க்கான பணிகள் 31.1.02017 லிருந்து 30.11.2017 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு 31.12.1999 வரை பிறந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட அருகில் உள்ள வாக்குச் சாவடிகளில் அல்லது தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் படிவம் 6ஐ பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயதிற்கான ஆதார சான்று நகல் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார நகல் ஆகியவற்றை இணைத்து படிவம் பெற்ற இடத்திலேயே அளித்திடலாம்.
காலக்கெடு நீட்டிப்பை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தமுறை 2018 பணிகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 30.11.2017 வரை தொடர்ந்து நடைபெறும், தேவையான படிவங்களுடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பர். எனவே. புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6ஏ), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7ஐயும், பெயர், முகவரி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் படிவம் 8ஐயும்.
ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8 ஏ ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றாவண நகல்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடமே விண்ணப்பிக்கலாம், தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.elections.tn.gov.in > . இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2018 அன்று வெளியிடப்படும், இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
0 coment rios: