பேராவூரணி பாசன வாய்க்காலில் கொட்டப்படும் சாக்கடை மாவட்ட நிர்வாகம் தடுக்க கோரிக்கை.
பேராவூரணியில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் சாக்கடை கழிவு நீரால் பொதுமக்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் மிகுந்த அவதிக் குள்ளாகி வருகின்றனர்.பேராவூரணி பேரூராட்சி பகுதியில் முறையான கழிவுநீர் வசதி ஏற்பாடு செய்யப்படாமல் உள்ளது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஓட்டல் உள்ளிட்ட வணிக வளாகங்களில், வெளியேறும் கழிவுநீரை டேங்கர் லாரிகளில் ஏற்றிச்சென்று நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் சமீப காலமாக சேதுசாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே,விவசாயத்திற்கு என செல்லும் தண்ணீர் வராத வாய்க்காலில் சாக்கடை கழிவுநீரை நள்ளிரவு நேரங்களில், பேரூராட்சிபணியாளர்கள் கொட்டிச் செல்கின்றனர்.
அருகிலேயே குடியிருப்பு பகுதிகள், தொடக்கப்பள்ளி, வட்டாட்சியர் அலுவலகம், வேளாண்மை அலுவலகம், மகளிர் மேல்நிலைப்பள்ளி, போக்குவரத்துக் கழக அலுவலகம், மாணவியர் விடுதி இருப்பதால் இப் பகுதியில் அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுமழை காலமாக இருப்பதால் கடும்துர்நாற்றம் வீசுவதோடு, சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. பேராவூரணி பகுதியில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் சூழலில் பேரூராட்சி சாக்கடை கழிவுகளை இப்பகுதியில் வெளியேற்றாமல், ஒதுக்குப்புறமான இடங்களில் நகருக்கு வெளியேகொண்டு சென்று அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மீண்டும் இப்பகுதியில் சாக்கடை நீர் கொட்டப்பட்டால் பேரூராட்சி வாகனம் சிறைப் பிடிக்கப் படும் என கே.கே.நகர், பாந்தக்குளம், அண்ணாநகர், சேதுரோடு பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
0 coment rios: