பேராவூரணி பேரூராட்சிப் பகுதியில் சுகாதார பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக, பொதுமக்களில் பலர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். சுகாதாரப் பணிகளில் பேரூராட்சி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண் டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கடைக்கோடி பகுதி பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி பகுதியாகும். 18 வார்டுகள் கொண்ட இங்கு கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட மக் கள் பிரதிநிதிகள் இல்லாததால், விரைவுபடுத்த ஆளில்லாத நிலையில் சுகாதாரப் பணிகள் சீர்குலைந்து காணப்படுகிறது.
தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைக் கழிவு நீர் அகற்றப்படாமலும் தேங்கிக் கிடக்கிறது. நாட்டாணிக்கோட்டை, அண்ணாநகர், கே.கே.நகர், ஆனந்தவள்ளி வாய்க்கால், தேவதாஸ் ரோடு, ஆஸ்பத்திரி ரோடு, சிதம்பரம் ரோடு என அனைத்து வார்டுகளிலும் தெருக்களில் குப்பைகள் நிறைந்து கிடப்பதும், சாக்கடை கழிவு நீர் தேங்கிநிற்பதும் சாதாரணமாகிவிட்டது.முன்னாள் பேரூராட்சி 8 ஆவது வார்டு கவுன்சிலர் குமணன் (திமுக) கூறுகையில், “ நகரில் ஏராளமாக பன்றிகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக 8 ஆவதுவார்டில் சுகாதார சீர்கேட்டைஏற்படுத்தும் வகையில் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. சாக்கடைகளில் புரண்டு திரியும்பன்றிகளால் காய்ச்சல் மற்றும்தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. பேரூராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை” என்றார்.பேரூராட்சி செயல் அலுவலர் பணியிட மாறுதலில் செல்லஇருப்பதாகவும், இதன் காரணமாக ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பேராவூரணியில் பெருமளவில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள், பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பட்ட மக்கள்டெங்கு, மலேரியா, உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், “ பேராவூரணி மட்டுமின்றி தொகுதி முழுக்கவே மர்மகாய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. சுகாதாரத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தும்” என்றார்.
நன்றி : தீக்கதிர்
0 coment rios: