Monday, June 5, 2017

பேராவூரணி தண்ணீருக்காக அலையும் மக்களின் தாகம் தீர்க்கும் தனி மனிதர்.

கடும் கோடை காரணமாக பேராவூரணி நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தன்னுடைய ஆழ்துளைக்கிணறு மூலம் தண்ணீர்தந்து தாகம் தீர்க்கும் பணியை தனி மனிதர் ஒருவர் செய்து வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி, மாவட்டத்தின் கடைசிஎல்லையோர பகுதியாகும். தேர்வுநிலைபேரூராட்சி பகுதியான பேராவூரணியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்வசிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தின்சார்பில் 30-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, நகர் முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. தற்போது கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாததாலும், அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், கோடை வெயில்சுட்டெரித்து வருவதாலும் நிலத்தடி நீர்மட்டம் 350 அடிக்கு கீழே சென்று விட்டதால், தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உள்ளது.
மேலும் நீர்மூழ்கி மோட்டார் இயங்காமல் போவதால் தண்ணீர் விநியோகம் செய்வதில் கடுமையான பிரச்சனைகளை பேரூராட்சி நிர்வாகம் சந்திக்க வேண்டி உள்ளது. குடிநீர் பிரச்சனை குறித்து பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மனு அனுப்பியுள்ளனர்.இந்நிலையில் தண்ணீர் இன்றி தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு உதவி வருகிறார் கண்ணாடிக்காரர் மகன் இளங்கோஎன்பவர். அறுபது வயதை நெருங்கிய முன்னாள் ஒப்பந்தகாரரான இவர் தனக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணற்றில் இருந்து கடந்த 2 மாத காலமாக இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு தண்ணீர் தந்து உதவி வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் மு.சீனிவாசன் முன்னின்று செய்து வருகிறார்.தண்ணீர் இன்றி இப்பகுதி மக்கள் தவிப்பதைக் கண்டு, முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன் ஒப்பந்தகாரர் இளங்கோவை அணுகி பேசினார். “அதற்கென்ன தாராளமாக எடுத்து கொள்ளுங்கள்” என சொல்லவும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. அதனையடுத்து தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் இப்பகுதிமக்களுக்கு தண்ணீர் வழங்கி அனைவர் மனதிலும் இடம் பெற்று விட்டார் ஒப்பந்தகாரர் இளங்கோ.ஒப்பந்தக்காரர் இளங்கோவிடம் பேசியபோது,” நான் வளர்ந்த இப்பகுதியில், அனைத்து தரப்பு மக்களும் தண்ணீர்இன்றி தவிப்பதை கவுன்சிலர் சீனிவாசன் மூலம் அறிந்தேன். குறிப்பாக இப்பகுதி சிறுபான்மை இன மக்கள் ரமலான் நோன்பு வைத்துக்கொண்டு படும் அவதிசொல்லமுடியாது. என்னால் முடிந்த வரை இப்படி உதவுகிறேன். இதைப் போல ஒவ்வொரு பகுதியிலும் ஆழ் துளைக் கிணறு வைத்துள்ளவர்கள் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தந்து உதவலாம்” என்றார்.இப்பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவிகள் அமிர்தம், காமாட்சி ஆகியோர் கூறுகையில்,” தண்ணீர் இன்றி தவித்து வந்தபோது இளங்கோ அய்யா தன்னலம் கருதாமல் தண்ணீர் தந்து உதவி வருகிறார்.
நாளொன்றுக்கு ஒரு குடும்பத்திற்குசராசரியாக 25 குடம் தண்ணீர் தேவைப் படுகிறது. குடிக்க, குளிக்க, புழங்க எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் தண்ணீர்தேவை என்பது சமாளிக்க முடியாத அளவுஉள்ளது. இரண்டு மாத காலமாகவே பேரூராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை. இவரைப் போன்றவர்களால் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது” என்றனர்.பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசியபோது, “தண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்கபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியரும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில்இதற்கான ஆலோசனை வழங்கியுள்ளார். புதிய கூடுதல் ஆழமும், சக்தியும் கொண்ட ஆழ்துளைக்கிணறு அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனர்.பேரூராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
நன்றி :  தீக்கதிர் 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: