பொங்கல் விழாவையொட்டி, தென்மண்டல வீர விளையாட்டு கலைச் சங்கம் சார்பில் இப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) வரை நடைபெறுகிறது.
இதில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், மலேசியாவிலிருந்தும் சேவல்கள் வந்துள்ளன. தொடக்க நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான சேவல்கள் பங்கேற்றன. இதற்காக 30 களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு போட்டியும் ஒரு மணிநேரம் நடைபெற்றது. இதில், தலா 15 நிமிடங்கள் போட்டி, இடைவேளை போட்டி என மாறி, மாறி விடப்பட்டது. சேவல் வட்டதுக்கு வெளியே சென்றாலோ அல்லது தலை துவண்டாலோ அல்லது ஓடினாலோ தோற்றதாக அறிவிக்கப்பட்டது. கால்நடைதுறை மண்டல இணை இயக்குநர் மாசிலாமணி தலைமையில், உதவி இயக்குநர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன் உள்பட சுமார் 30 கால்நடை மருத்துவர்கள் சேவல்களின் காலில் நகம் இருக்கிறதா, மது கொடுக்கப்பட்டுள்ளதா என பரிசோதனை செய்தனர். இதன் பிறகே போட்டியில் பங்கேற்க சேவல்கள் அனுமதிக்கப்பட்டன.
போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு, போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தரவும், சேவல்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை உடனுக்குடன் வழங்கவும் கால்நடை மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
இப்போட்டி குறித்து ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டை கே.ஆர்.ஆர். சேகர் தெரிவித்தது:
தமிழர்களின் பாரம்பரிய போட்டியான சேவல் சண்டை 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தற்போது தொடங்கியுள்ள இந்தப் போட்டியில் முதல் நாளில் தென்னிந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான சேவல்கள் வந்துள்ளன.
ககர், யாக்கூத், தும்மர், ஜாவா, சீத்தா, பொட்டமாரி உள்பட 15 வகை சேவல்கள் களத்தில் உள்ளன. இதில் பெரிய சேவல், சின்ன சேவல் என பிரித்து போட்டிக்கு அனுமதிக்கிறோம். வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பரிசுகள் வழங்கப்படுகின்றன என்றார் சேகர்.
நன்றி : தினமணி
0 coment rios: