நெற்யிரை தாக்கும் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நெற்பயிரை தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது இலைகருகல் நோய். இந்த நோய் விதை, மழை, செடிகள் உரசுதல், அடித்தாள்கள், வைக்கோல், நெற்கழிவுகள், நெருக்கமான நடவு, அதிக அடர்த்தி உள்ள பயிர் மற்றும் மந்தமான சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் பரவுகிறது. இலைகருகல் நோய் தாக்கிய நெற்பயிரில் ஆரம்ப நிலையில் பச்சை அல்லது மஞ்சள்நிற புள்ளிகள் தோன்றும்.
இதனால் பயிரின் நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகிறது. நோய் முற்றிய நிலையில் பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும்.
மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீரில் போட்டால் நிறம் மாறுவதை காணலாம். இந்த நோய் ஏற்பட்ட வயல்களில் இருக்கும் தண்ணீரை மற்ற வயல்களுக்கு பாய்ச்சக்கூடாது. இலைகருகல் நோயை கட்டுப்படுத்த சூடோமோனஸ் புளோரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நடவு செய்த 40வது மற்றும் 50வது நாளில் இலை வழியாக 2 கிராம் சூடோமோனஸ் புளோரசன்சை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும் இந்த கரைசலை நோய் தோன்றும் தருணத்திலும், மீண்டும் 10 நாட்கள் இடைவெளியிலும் தெளிக்கலாம்.
நன்றி : தினகரன்
0 coment rios: