பட்டுக்கோட்டையில் நிகழாண்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு.
பட்டுக்கோட்டை நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் வி.கே.டி. பாரதி, நகராட்சி ஆணையர் கே. அச்சையா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
தலைவர்: பட்டுக்கோட்டை நகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த நகராட்சியாக தேர்வு செய்து, சென்னையில் நடைபெற்ற 70-வது சுதந்திர தினவிழாவில் ரூ. 15 லட்சத்துக்கான காசோலையுடன், முதல் பரிசுக்கான விருதையும் வழங்கிப் பெருமைப்படுத்திய தமிழக முதல்வருக்கு நமது நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
எம். செந்தில்குமார் (மதிமுக): அனைத்து வார்டுகளிலும் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொள்ள வேண்டும்.
எம்.ஆர். செந்தில்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): பட்டுக்கோட்டை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
தலைவர்: இந்த ஆண்டுக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆர். ரவிச்சந்திரன் (அதிமுக): எனது வார்டு பாளையம் பகுதியில் ஒரே மாதத்தில் நேரிட்ட சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, அப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.
பி.எஸ். பிரபு (அதிமுக): பட்டுக்கோட்டை நகராட்சி மருத்துவமனையை விரிவுபடுத்தி புதிய கட்டடம் கட்ட, நவீன கருவிகள் வாங்க ரூ. 60 லட்சம் ஒதுக்கியுள்ள தமிழக அரசுக்கு நன்றி.
எஸ். மாஸ்கோ (அதிமுக): நமது ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆதார் அட்டை வழங்க வேண்டும்.
ஏ. மெகராஜ்பேகம் (திமுக): எனது வார்டில் 3 பாலங்கள் கட்டும் பணி, சிமென்ட் சாலை அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. அவற்றை உடனடியாகத் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பட்டுக்கோட்டை நகரில் 27 சாலைகளை ரூ. 4 கோடியில் தார்ச்சாலையாக மாற்றுவது. பழுதடைந்த சாலைகளை மேம்படுத்துவது. பட்டுக்கோட்டை நகராட்சிக்கு தமிழக முதல்வர் வழங்கிய ஊக்கத்தொகை ரூ. 15 லட்சத்தில் நாடிமுத்துநகர் காந்தி பூங்காவில் மராமத்துப் பணிகள் மேற்கொள்வது. இதுதவிர, நகரில் ரூ. 45 லட்சம் செலவில் மழைநீர் வடிகால், குடிநீர் குழாய்கள் அமைப்பது. பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது.
0 coment rios: