வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசியது:
வடகிழக்குப் பருவ மழை அக். 15-ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு துறையும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட செய்து முடிக்க வேண்டும். வடகிழக்குப் பருவ மழையின்போது பொதுமக்கள் வெள்ள சேதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் உள்ள 14 புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் பாலங்கள் மற்றும் சாலைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுரங்கப் பாதைகளைத் தண்ணீர் தேங்கி நிற்கும் போது அதை வெளியேற்ற மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் ஆகியவை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
கிராமங்களில் பயிர் சேதம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமக் கணக்குகளில் பதிவு செய்ய வேண்டும். நிவாரண மையங்களான மாநகராட்சி, நகராட்சி, அரசுப் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருள் வழங்கல் துறை மழைக் காலங்களில் போதிய அத்தியாவசிய பொருள்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். பள்ளிக் கல்வி துறையினர் மழை காலங்களில் பொது மக்களைப் பள்ளிகளில் தங்க வைக்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: